1425. ‘சீலம் அல்லன நீக்கி, செம்பொன் துலைத
தாலம் அன்ன தனி நிலை தாங்கிய
ஞால மன்னற்கு, நல்லவர் நோக்கிய
காலம் அல்லது கண்ணும் உண்டாகுமோ?

     சீலம் அல்லன நீக்கி - நல்லொழுக்கத்திற்குப் படாதவைகளை நீக்கி;
செம்பொன்துலைத் தாலம் அன்ன - சிவந்த பொன்னை நிறுத்துகின்ற
தராசினது  நடுநாவை ஒத்த;  தனிநிலை- ஒப்பற்ற  நடுவு நிலைமையை;
தாங்கிய - உடைய;  ஞால மன்னற்கு - உலகை ஆளும்அரசனுக்கு;
நல்லவர் - அமைச்சர்கள்;  நோக்கிய - ஆராய்ந்துரைத்த; காலம்அல்லது
- பொழுது அல்லாமல்; கண்ணும் உண்டாகுமோ? - வேறு கண்ணும்
உண்டாகுமோ?’ (இல்லை).

     நடுவு நிலைமை - பகை,  நொதுமல்,  நட்பு என்னும் மூன்று திறத்தார்
கண்ணும் அறத்தின் வழுவாதுஒப்ப நிற்கும் நிலைமை. தாலம் - தாலு -
தாக்கு.

     துலையின் நடுமுள்ளை நாக்கு எனல் வழக்கு.  நடுவு நிலைமைக்குத்
துலாக்கோல்  உவமையாதல்“சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல்
அமைந்து ஒருபாற், கோடாமை  சான்றோர்க் கணி” என்பதிற் (குறல். 118)
காண்க. பொன்னெடை என்பது மிகத் துல்லியமாக நிறுக்கப்படுவது; ஆதலின்
‘செம்பொன் துலை’  என்றார்.  நல்லவர் - இங்கு அமைச்சர்.  ‘காலமறிதல்’
என்னும் திருக்குறள்அதிகாரத்தின்கண் ‘காலம்’ அரசர்க்கு இன்றியமையாத
சிறப்புடையது எனல் காண்க.                                    27