1426. | “ஒர்வின் நல் வினை ஊற்றத்தினார் உரை போர் இல் தொல் விதி பெற்று உளது” என்று அரோ, தீர்வு இல் அன்பு செலுத்தலின், செவ்வியோர் ஆர்வம் மன்னவற்கு ஆயுதம் ஆவதே. |
‘ஓர்வின் - ஆய்வினை உடைய; நல்வினை ஊற்றத்தினார் - நல்ல தொழிலின்கண் எப்பொழுதும் முயலும் முயற்சியை உடைய முனிவர்களது; உரை - மொழியை; பேர்வுஇல் தொல்விதி- மாறு படுதல் இல்லாத பழைய விதி; பெற்று உளது - அடைந்து (அவ்வுரைவழி) நடக்கின்றது; என்று - என்று கருதி; தீர்வுஇல் அன்பு செலுத்தலின் - அவர்களிடத்து நீங்காதஅன்பைச் செலுத்துகின்ற காரணத்தால்; செல்வியோர் ஆர்வம் - நன்மையுடைய அப்பெரியோர்தம்பால் செலுத்தும் விருப்பம்; மன்னவற்கு - அரசனுக்கு; ஆயுதம் ஆவது - படைக்கலம்ஆகும்.’ முன்னர் (1416) ‘அவர் ஏவ நிற்கும் விதி’ என்றதும் காண்க. முனிவர்க்கு ஊழும் கட்டுப்பட்டு நடக்கும். அதனால் அவர்களது பிரியத்தைக் சம்பாதித்துக்கொள்ளுதல் மன்னவற்குப் பெரும்படையாகும். ‘அன்பீனும் ஆர்வம் உடைமை அதுவீனும், நண்பு என்னும் நாடாச் சிறப்பு” என்ற குறளைப்(குறள் - 74) பின்னிரண்டு வரிகளுடன் ஒப்பிடுக. ‘அரோ’ ‘ஏ’ ஈற்றசை. 28 |