தயரதன் நகரை அழகுசெய்ய ஆணையிடல் 1430. | ஏற்றிட, ஆண்தகை இனிது இருந்துழி, நூல் தட மார்பனும், நொய்தின் எய்தப்போய், ஆற்றல் சால் அரசனுக்கு அறிவித்தான்; அவன், ‘சாற்றுக, நகர் அணி சமைக்க’ என்றனன். |
ஏற்றிட - (தர்ப்பாசனத்தில்) இருக்கச்செய்ய; ஆண்தகை - இராமன்; இனிது இருந்துழி - (விரதாதி சடங்குகளைச் செய்து கொண்டு) இனிமையாக இருந்தபொழுது; நூல் தடமார்பனும் - முப்புரி நூலைத் தரித்த அகன்ற மார்பினை உடைய வசிட்டனம்; நொய்தின் எய்தப் போய்- விரைவாக அடையச் சென்று; ஆற்றல்சால் அரசனுக்கு -வலிமை மிகுந்த சக்கரவர்த்திக்கு; அறிவித்தான் - (செய்தியைத் ) தெரிவித்தான்;அவன் - அம்மன்னவன்; ‘நகர் அணி சமைக்க - நகரத்தை அழகு செய்ய; சாற்றுக- பறையறைவிப்பீராக; என்றனன் - என்று சொன்னான். இருந்த உழி - இருந்துழி, விகாரம். எய்த - அருகில், வசிட்டன் இராமனுக்கு உரிய சடங்குகள்நிறைவேற்றப்பட்ட செய்தியைத் தெரிவித்தான். அதன் பின்னர் முரசு அறைக என்றான் தயரதன். 32 |