1434.திணி சுடர் இரவியைத் திருத்துமாறுபோல்,
பணியிடைப் பள்ளியான் பரந்த மார்பிடை
மணியிடை வேகடம் வகுக்குமாறுபோல்,
அணி நகர் அணிந்தனர் - அருத்தி மாக்களே.

     அருத்தி மாக்கள் - அன்புடைய அயோத்தி நகர மக்கள்;  திணி
சுடர் இரவியைத்திருத்துமாறுபோல் -
நெருங்கிய கதிர்களையுடைய
சூரியனைச் சீர்திருத்தும் தன்மையைப்போலவும்;பணியிடைப் பள்ளியான்-
பாம்பின் இடையே படுத்துறங்கும்  திருமாலின்;  பரந்தமார்பிடை -
அகன்ற மார்பின் நடுவில் அமைந்த; மணியினை - கௌஸ்துப மணியினை;
வேகடம் வகுக்குமாறுபோல் - சாணை பிடித்து  மாசு போக்குதலைப்
போலவும்;  அணிநகர்அணிந்தனர் - முன்போ அழகுற உள்ள
அயோத்திநகரை  மேலும் அலங்கரித்தார்கள்.

     இயல்பாகவே அழகான அயோத்திநகரை மீண்டும் அழகு செய்தலை
இரண்டு உவமைகளால்விளக்கினார். ஒளியுடைய சூரியனை மேலும் திருத்து
தலையும்.  கௌஸ்துப மணியைப் பட்டை தீட்டி ஒளிஊட்டுதலையும் போல
என்பதால், அவை இரண்டும் போல அயோத்தியும் இயற்கையாகவே
அழகுடையது என்றாயிற்று, வேகடம் - சாணைபிடித்தல். அருத்தி - அன்பு.
‘ஏ’ ஈற்றசை.                                                  36