1435. | வெள்ளிய, கரியன, செய்ய, வேறு உள, கொள்ளை வான் கொடி நிரைக் குழாங்கள் தோன்றுவ - கள் அவிழ் கோதையான் செல்வம் காணிய, புள்எலாம் திருநகர் புகுந்த போன்றவே. |
வெள்ளிய - வெண்மையானவை; கரியன - கருமையானவை; செய்ய- செம்மையானவை; வேறு உள - வேறு பல நிறமானவை ஆக; கொள்ளை- மிகுதியான; வான் - பெரிய;கொடி நிரைக் குழாங்கள் - கொடி வரிசைக் கூட்டங்கள்; தோன்றுவ - நகரில் தோன்றுகின்றன(அவை); கள் அவிழ் கோதையான்- மதுவிரியும் மாலையணிந்த இராமனது; செல்வம்- முடிசூட்டு விழாச் செல்வத்தை; காணிய - காண விரும்பி; புள் எலாம் -பறவைகள் எல்லாம்; திருநகர் - அயோத்தியில்; புகுந்த போன்ற - நுழைந்தவை போன்றுள்ளன, பலவகை நிறமுடைய கொடிகள் கட்டப்பெற்றதைப் பறவைகள் நகரிற் புகுந்தனபோல் என வருணித்தார்.‘தோன்றுவ’ படுத்தல் ஓசையாற் பெயராயிற்று. ‘ஏ’ காரம் ஈற்றசை 37 |