1437. | முதிர் ஒளி உயிர்த்தன, முடுகிக் காலையில் கதிரவன் வேறு ஒரு கவின் கொண்டான் என - மதி தொட நிவந்து உயர் மகர தோரணம் புதியன அலர்ந்தன புதவ ராசியே. |
புதவ ராசி - கோபுர வாயிற் கதவுகளின் வரிசைத் தொகுதிகள்; காலையில் கதிரவன்- காலைப்பொழுதில் உள்ள இளஞ்சூரியன்; முடுகி - விரைந்து சென்று (நண்பகலில்); வேறுஒரு கவின் கொண்டான் - வேறுபட்ட ஒர் அழகைக் கொண்டனன்; என - என்றுசொல்லும்படி; மதி தொட நிவந்து உயர் மகர தோரணம் - சந்திரனைத் தொடும்படி உயர்ந்த மகரமீன் வடிவமாகச் செய்யப்பெற்ற தோரணங்கள்; முதிர்ஒளி உயிர்த்தன- மிக்கசோபையை வீசினவாய்; புதியன - புதியனவாய்; அலர்ந்தன - விளங்கப்பெற்றன. கோபுர வாயிற் கதவுகளில் மகரதோரணங்கள் புதியனவாய்க் கட்டப் பெற்றமையை வருணித்தார்.புதவம் - கதவு. புதா என்பது புதவு என ஆகி புதவம் என அம் சாரியை பெற்றது. “குறியதன் கீழ் ஆக்குறுகலும் அதனோடு உகரம் ஏற்றலும்” (நன். 172........) என்பது இலக்கணவிதி செஞ் சூரியனாகியஉதய சூரியன் நண்பகலில் வெள்ளொலி விரித்தல் வெளிப்படை. ‘ஏ’காரம் ஈற்றசை. 39 |