1438.துனி அறு செம்மணித் தூணம் நீல் நிறம்
வனிதை - ஓர் - கூறினன் வடிவு காட்டின;
புனை துகில் உறைதொறும் பொலிந்து தோன்றின.
பனி பொதி கதிர் எனப் பவளத் தூண்களே.

     புனை துகில் உறை தொறும் பொலிந்து  தோன்றின - அழகிய
(வெண்மையான ) துணி உறைகளுக்குள்ளே விளங்கித் தோன்றுவனவாகிய;
துனி அறு - குற்றம் அற்ற;  செம்மணித்தூணம் - சிவந்த மாணிக்கத்தால்
ஆகிய தூண்கள்;  நீல் நிற வனிதை - நீல நிறம்உடைய பார்வதியை;
ஓர் கூறினன் - தன்னுடைய இடப்பாகத்தில் உடையவன் ஆகிய
சிவபெருமானது; வடிவு - (திருநீறு பூசிய செம்மை) வடிவத்தை; காட்டின -
காண்பித்தன;பவளத் தூண்கள் - (வெள்ளுறையில் பொதிந்த) பவளத்தால்
ஆகிய தூண்கள்; பனி பொதிகதிர் என - பனியில் மறைந்த காலைச்
செஞ்சூரியன் என்னும்படி (பொலிந்து தோன்றின -விளங்கித் தோன்றின.)

     செம்மணித் தூண்களும் பவளத் தூண்களும் வெண்மையான துணி
உறையால் மூடப்பெற்றுள்ள காட்சியைச்சித்திரித்தார். திருநீறு
வெண்மையான உறைக்கும், உள்ளே பொதிந்த செம்மேனி செம்மணித்
தூணத்துக்கும்உவமையாம். அவ்வாறே பனி வெள்ளுறைக்கும், உட்பொதிந்த
சிவந்த சூரியன் பவளத்தூணுக்கும்உவமையாம். ‘புனைதுகில் உறைதொறும்
பொலிந்து தோன்றின’ என்ற மூன்றாம் அடியை முன்னும்  பின்னும்கூட்டிப்
பொருள் செய்க, இது இடை நிலைத் தீவக அணியோடு கலந்துவந்த
உவமையணியாம். துகில் -வெண்மையான ஆடை. ‘ஏ’ காரம் ஈற்றசை.   40