1440.ஆடல் மான் தேர்க் குழாம், அவனி காணிய,
வீடு எனும் உலகின் வீழ் விமானம் போன்றன;
ஓடை மாக் கட களிறு, உதய மால் வரை
தேட அருங் கதிரொடும் திரிவ போன்றவே.

     ஆடல் மான் - பல்விதமான செலவுகளினால் நடனம்  இடுவது
போன்ற  குதிரைகள்  பூட்டப்பெற்ற;  தேர்க் குழாம் - தேர்த் தொகுதிகள்;
அவனி காணிய -  மண்ணுலகினைக்காணும் பொருட்டு; வீடு எனும்
உலகின் வீழ் -
சுவர்க்கம் என்கின்ற உலகத்திருந்தும்இறங்கிய; விமானம்
போன்றன
- விமானத்தை ஒத்தன;  ஓடை மாக் கட களிறு - முகபடாம்
அணிந்த பெரிய மதம் உடைய யானைகள்;  உதய மால் வரை - பெரிய
உதயமலை; தேட அருங்கதிரொடும்- ஒப்புச் சொல்லுதற்கரிய
சூரியனோடும்; திரிவ போன்ற - நகர வீதிகளில் திரிவனவற்றை
ஒத்திருந்தன.

     வீதிகளில் குதிரை பூட்டிய தேர்களையும், முகபடாம் அணிந்த
யானைகளையும் விமானம் ஆகவும்,உதய மலையாகவும் வருணித்தார்.
ஐங்கதி உடையமையால் ஆடல்மான் என்றார். ஐந்து கதியாவன; மல்ல கதி,
மயூர கதி,  வியாக்கிர கதி,  வானர கதி,  இடப கதி என்பன.  பல்வேறு
வகையான ஓட்டங்களைஇங்கே ஆடல் என்றார். ‘ஏ’ காரம் ஈற்றசை.    42