1441.வளம் கெழு திரு நகர் - வைகும் வைகலும்,
பளிங்குடை நெடுஞ் சுவர் படுத்த பந்தியில்
 கிளர்ந்து எறி சுடர் மணி இருளைக் கீறலால், -
வளர்ந்தில, பிறந்தில, செக்கர் வானமே.

     வளம் கெழு திருநகர் - வளம் பொருந்திய அழகிய அயோத்தி
நகரில்;  வைகும்- பொருந்திய;  பளிங்குடை நெடுஞ்சுவர் - பளிங்குக்
கற்களையுடைய பெரிய சுவர்களில்;படுத்த பந்தியில் கிளர்ந்து 
எறிசுடர்மணி -
சேர்த்தமைத்த வரிசையாய் அமைந்துமிக்கு மேலேறிப்
பிரகாசிக்கின்ற ஒளிபடைத்த செம்மணிகள்;  வைகலும் -  நாள்தோறும்; 
இருளைக் கீறலால் - மாலைப் பொழுதில் மேல் எழும் இருளைப்
போக்குதலால்;  செக்கர்வானம் - செவ்வானமானது; (அங்கு) பிறந்தில -
புதிதாகத் தோன்றவில்லை;  வளர்ந்தில- வளரவும் இல்லை.

     பளிங்குச் சுவரில் பதித்த செம்மணிகள் இருள் கீற ஒளிர்கின்றன. 
செவ்வானம் போல  உள்ளன.மாலையில் தோன்றி மறையும் செவ்வானம் 
இந்நகரில் எப்பொழுதும் ஒரு தன்மையாக இருந்தது; தோன்றவும் வளரவும்
இல்லை என்று படியாம். ‘ஏ’ காரம் ஈற்றசை.                        43