1443. காரொடு தொடர் மதக் களிறு சென்றன.
வாரொடு தொடர் கழல் மைந்தர் ஆம் என;
தாரொடு நடந்தன பிடிகள், தாழ் கலைத்
தேரொடு நடக்கும் அத் தெரிவைமாரினே.

     வாரொடு தொடர் கழல் மைந்தர் ஆம் என - வார்கயிற்றாற்
கட்டிய வீரக்கழலை உடைய வீரர் போல; காரொடு தொடர் மதக் களிறு
சென்றன -
மேகத்தோடு ஒப்புமை பற்றுகின்ற மதநீர் உடைய யானைகள்
சென்றன; தாழ்கலைத் தேரொடு - தொங்கக்கூடிய மேகலை யணிந்த தேர்
போன்ற அல்குலோடு; நடக்கும்-நடந்து செல்லும்; அத் தெரிவைமாரின்-
அந்நாட்டுப்பெண்களைப் போல; பிடிகள் - பெண் யாணைகள்; தாரொடு
நடந்தன -
தம்மேல்கட்டிய கிண்கிணி  மாலையுடன் சென்றன.

     அழகுபடுத்தப் பெற்ற களிறும் பிடியும் அந்நகரில் நடந்து சென்ற
காட்சியை மைந்தரும் மாதரும் போல என்று வருணித்தார்; ‘வார்’  -
தோற்கயிறு;  வீரக் கழலைக் கட்டப்  பயன்படுவது. தார் - கிண்கிணிச் 
சதங்கை கோத்த மாலை. ‘கலைத்தேர்’ அல்குலுக்கு வெளிப்படை.  கலை -
மேகலை, முதற்குறை,  மேகலை யணிந்த தேர்  எனவே அல்குலாயிற்று.
இனி,  இதனையே அந்நகரில் மைந்தர்களிறு போலச் சென்றனர் என்றும், 
தெரிவைமார் பிடிபோல நடந்தனர் எனவும் கொள்ள வைத்தநயம் அறிந்து
மகிழற்பாலது, ‘ஏ’ காரம் ஈற்றசை.                              45