1444.ஏய்ந்து எழு செல்வமும், அழகும், இன்பமும்,
தேய்ந்தில; அனையது தெரிந்திலாமையால்,
ஆய்ந்தனர் பெருகவும் - அமரர், இம்பரில்
போந்தவர், ‘போந்திலம்’ என்னும் புந்தியால்.

     ஏய்ந்து எழு செல்வமும் - பொருந்தி மேன்மேலும்  வளர்கின்ற
செல்வமும்;  அழகும் -;  இன்பமும்  -;  தேய்ந்தில - குறைந்திருக்க
வில்லை (பொன்னகரிற் போலவே நிறைந்துள்ளன);அனையது -
அத்தன்மையை  ஒத்தது; தெரிந்திலாமையால் - முன்னர் அறியாதபடியால்;
இம்பரில் போந்தவர் அமரர் - (இராமனது முடிசூட்டுவிழாக் காண)
அயோத்திக்கு வந்தவராகியதேவர்; ‘போந்திலம்’ - இன்னும் அயோத்திக்கு
வந்தோம் இல்லை;  என்னும் புந்தியால்- என்கின்ற எண்ணத்தால
பெருகவும் ஆய்ந்தனர்
- மிகவும் ஆராய்ந்தனர்.

     அயோத்தி பொன்னகரம் போலச் செல்வம், அழகு, இன்பங்களால்
குறை வின்றி இருக்கிறது. அதனால் அயோத்திக்கு வந்த தேவர்கள் ‘இன்னும்
அயோத்திக்கு வந்தோம் இல்லையே, நம் பொன்னகரத்தில்தானே
இருக்கின்றோம்’ என்று பெரிதும் ஆலோசிக்கத் தொடங்கினார்கள் என்பதால்
அயோத்திக்கும்பொன்னகரத்திற்கும் வேறுபாடில்லை என்றார். 36 ஆம்
பாடல் முதல் இதுவரை அயோத்திநகரை அலங்கரித்தவாறுகூறினார்.    46