கூனி கைகேயியின் அரண்மனை அடைந்து அவளை எழுப்புதல்

1447.தொண்டைவாய்க் கேகயன் தோகை கோயில்மேல்
மண்டினாள் - வெகுளியின் மடித்த வாயினாள்,
பண்டை நாள் இராகவன் பாணி வில் உமிழ்
உண்டை உண்டதனைத் தன் உள்ளத்து உள்ளுவாள்.

     பண்டைநாள் - (இராமனது குழந்தைப் பருவமாகிய) முன்னாயில்;
இராகவன் -இராமனது;  பாணி வில் - கையில் உள்ள வில்லினால்; 
உமிழ்-வெளிப்படுத்தப்பெற்ற;உண்டை - மண்ணுருண்டை; உண்டதனை-
(தன்மேல்) பட்டதனை; தன் உள்ளத்து-தன் மனத்தின்கண்; உள்ளுவாள்-
நினைத்து;  வெகுளியின் - கோபத்தால்; மடித்த - கீழ் உதட்டை மடித்துக்
கடித்த;  வாயினாள் - வாயை உடையவனாய்;  தொண்டை வாய் -
கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயை உடைய;  கேகயன் தோகை -
கைகேயியின்; கோயில் மேல் - மாளிகையிடத்து; மண்டினாள் - நெருங்கி,
(‘எய்தினாள்’எனமேல் முடியும்)

     இராமன் சிறுவனாய் இருந்தபொழுது  கையிற் சிறு வில்லும்
மண்ணுருண்டை கோத்த அம்பும் கொண்டுகுளத்தருகே விளையாடி
வருகையில், இக்கூனி,  குடங்கொண்டு நீர்மொண்டு  மகளிருடனே கலந்து
வரும்போது, தன் அரண்மனைத் தாதிதானே என்ற சொந்தத்தால், 
மண்ணுருண்டையை வில்லிற்கோத்து இவள்மேல் அடித்தான். இவள்
கைநெகிழ்ந்து  குடம் வீழ,  மற்ற மகளிர் பரிகசிக்க, இவள் கடுங்கோபம் 
உற்று இராமனைத் துன்புறத்தச் சமயம் நோக்கி இருந்தாள் என்பதோர் கதை,
இக்கதை வான்மீகத்தில்இல்லை;  கம்பரும் விரிவாகக் கூறவில்லை; 
ஆயினும் “கூனகம் புகத் தெறித்த கொற்றவில்லி”.“கொண்டை கொண்ட
கோதை மீது தேனுலாவு கூனி கூன் உண்டை கொண்டு அரங்க வோட்டி
உள் மகிழ்ந்தநாதன்”, “கூனே சிதைய உண்டைவில் நிறத்தில் தெறித்தாய்’
(திவ்யப். 780, 799,2947) என்னும்ஆழ்வார்கள் அருளிச் செயலால் விரிவாக
அறியப்படுகிறது. தொண்டை - கொவ்வைக் கனியைக் குறித்தது.;பொருளாகு
பெயர்.                                                      49