கூனி ‘வாழ்ந்தனள் கோசலை’ எனலும், கைகேயின் வினாவும் 1454. | ஆழ்ந்த பேர் அன்பினாள் அனைய கூறலும், சூழ்ந்த தீவினை நிகர் கூனி சொல்லுவாள், ‘வீழ்ந்தது நின் நலம்; திருவும் வீந்தது; வாழ்ந்தனள் கோசலை, மதியினால்’ என்றாள். |
ஆழ்ந்தபேர் அன்பினாள்- (இராமன் பால்) ஆழங்காற்பட்ட பேரன்பு உடையவளாய கைகேயி; அனைய கூறலும்-அத்தகைய வார்த்தைகளைச் சொல்லுதலும்; சூழ்ந்த தீவினை நிகர்கூனி- (அவனைச்) சுற்றிக் கொண்ட பாவத்தை யொத்த மந்தரை; சொல்லுவாள்-பேசத் தொடங்கி; ‘நின் நலம் வீழ்ந்தது- உனதுநன்மை அழிந்து போனது; திருவும்- உன் செல்வமும்; வீந்தது-கெட்டது; கோசலை- உன் மாற்றாளாய கோசலை; மதியினால்- புத்தித்திறமையால்; வாழ்ந்தனள்’ - செல்வமும் நன்மையும் பெற்று வாழ்ந்தாள்;’ என்றாள்-என்று கூறினாள். இராமன்பால் அன்பு பெருகிய கைகேயி கூறவும், அவள் மனத்தைத் திரிக்கக் கூனி ‘கோசலைவாழ்ந்தனள்’ என்று பெண்ணுக்குப் பெண் பொறாமைப்படும் உலகியல்பு பற்றித் தூண்டினாள். சூழ்ந்ததீவினை கைகேயியைச் சுற்றின பாவம் என்றதனால் அது தன் பயனைச் செய்தே தீரும் என்றாராம்.‘இனி வாழ்வாள்’ என எதிர்காலத்தால் கூற வேண்டுவதை ‘வாழ்ந்தனள்’ என இறந்த காலத்தாற் கூறியது தெளிவுபற்றி வந்த கால வழுவமைதி. கோசலை தன் திறமையால் தயரதனிடம் இதனைச் சாதித்துக் கொண்டாள்என்பதுபடக் கூறிக் கைகேயியைத் தூண்டினாளாம். 56 |