1458.ஆய பேர் அன்பு எனும் அளக்கர் ஆர்த்து எழ,
தேய்வு இலா முக மதி விளங்கித் தேசுற,
தூயவள் உவகை போய் மிக, சுடர்க்கு எலாம்
நாயகம் அனையது ஒர் மாலை நல்கினாள்.

     தூயவள் - தூய்மையான கைகேயி;  ஆய - உண்டாகிய;  பேர்
அன்பு -
பெரிய அன்பு; எனும் - என்கின்ற; அளக்கர் - கடல்; ஆர்த்து
எழ
- ஆரவாரித்து மேல்கிளம்ப;  தேய்வு  இலா - களங்கம் இல்லாத; 
முகமதி - முகமாகியசந்திரன்; விளங்கி - பிரகாசித்து; தேசுஉற - மேலும்
ஒளியடைய;  உவகை- மகிழ்ச்சி;  போய்மிக - எல்லை கடக்க;  சுடர்க்கு
எலாம் -
மூன்று சுடர்களுக்கும்; நாயகம் அனையது - தலைமை பெற்றது 
போன்றதாகிய;  ஓர் மாலை - ஒரு இரத்தினமாலையை;  நல்கினாள் -
(மந்தரைக்குப் பரிசாக) அளித்தாள்.

     மகிழ்ச்சியான நற்செய்தி அறிவித்தமைக்குப் பரிசாக மாலையை
அளித்தாள். ‘முகமதி’ என்ற உருவகத்தில்  குறை நீக்கி,  ‘தேய்வுஇலா’
என்றார்.  அன்புக்கடல் கைகேயி அகத்தே பொங்கி மேல்எழுந்தது, அதன்
வெளிப்பாடு முகத்தில் தோன்றியது என்றார். மனமாற்றம் சிறிதும்
எய்தப்பெறாதநிலையில்,  இங்கும் ‘தூயவள்’  என்றே  கைகேயியைக்
குறித்தது காண்க.                                              60