1461. | ‘சிவந்தவாய்ச் சீதையும் கரிய செம்மலும் நிவந்த ஆசனத்து இனிது இருப்ப, நின் மகன், அவந்தனாய், வெறு நிலத்து இருக்கல் ஆன போது, உவந்தவாறு என்? இதற்கு உறுதி யாது ?’ என்றாள். |
‘சிவந்த வாய்ச் சீதையும் - சிவந்த வாயினை உடைய சீதையும்; கரிய செம்மலும்- கருமையான மேனியுடைய இராமனும்;நிவந்த - உயர்ந்த; ஆசனத்து -சிங்காசனத்தில்; இனிது இருப்ப - இனிமையாக வீற்றிருப்ப; நின் மகன் -பரதன்; அவந்தனாய் - ஒன்றுமற்றவனாய்; வெறு நிலத்து - தரையில்; இருக்கல்ஆன போது- இருக்கும்படி நேரும் காலத்தில்; உவந்தவாறு என்? - (நீ)! மகிழ்ந்தகாரணம் யாது?; இதற்கு உறுதி யாது’ - இம்மகிழ்ச்சி அடைவதற்கு (நீ பெற்ற) நன்மை யாது?;' என்றாள் - என்று கூறினாள்.
‘இராமனும் சீதையும் சிங்காதனத்தில் வீற்றிருக்கையில் அவர்கள் பாதத்தின் கீழ் வெறுந்தரையில் பரதன் இருப்பானே! இதற்கா மகிழ்ச்சி அடைகிறாய்? நீ மகிழ்ச்சி அடையும்படி உனக்குஉண்டான நன்மைதான் என்ன?’ என்று மந்தரை கைகேயியை வினவினாள். தனக்கு வருகின்ற தொல்லையைமேற்பாட்டில் கூறியபிறகு. இங்குப் பரதனுக்கு வருகின்ற துன்பத்தைக் கூறினாள் என்க. அவத்தன்- அவந்தன் - வீணானவன் - ஒன்றுக்கும் பயனின்றிப் போனவன். 63 |