1464.‘பண்ணுறு கட கரிப் பரதன், பார் மகள்
கண்ணுறு கவினராய் இனிது காத்த அம்
மண்ணுறு முரசுடை மன்னர் மாலையில்
எண்ணுறப் பிறந்திலன்; இறத்தல் நன்று’ என்றாள்.

     ‘பண்உறு-அலங்கரித்தல் அமைந்த; கடகரி - மத யானையையுடைய;
பரதன்-; பார்மகள் கண்ணுறு  கவினராய்  - நிலமகள் விரும்பத் தக்க
அழகுடையவராய்; இனிது காத்த - இனிமையாக அரசாண்ட; அம்மண்ணுறு
முரசுடை  மன்னர்  மாலையில் -
அந்த மார்ச்சனை செறிந்த முரசத்தினை
உடைய அரசர் வரிசையில் வைத்து; எண்ணுற - நினைக்குமாறு(அரசனாக);
பிறந்திலன் - பிறக்கவில்லை;  இறத்தல் நன்று - (எனவே)
உயிர்வாழ்வதனினும்இறப்பதே மேல்;’  என்றாள் -

     அரசனாகும் பேறு இல்லாதவன் அரசகுலத்தில் பிறந்து வாழ்வதைவிடச்
சாவதே மேல் என்றுபரதனுக்காக இரங்கினாளாம்.  மன்னர் மாலை - அரச
பரம்பரை வரிசை. அது குலமுறை கிளத்து  படலத்திற்கூறியவாற்றான்
உணர்க.  மண் - மார்ச்சனை - அஃதாவது  ஒலிச்செறிவு ஆகும்.  அது
மண்பூசப் பெறுதலால்உளதாகும் என்பர்.                          66