1465. | ‘பாக்கியம் புரிந்திலாப் பரதன்தன்னை, பண்டு ஆக்கிய பொலங் கழல் அரசன், ஆணையால், தேக்கு உயர் கல் அதர், கடிது சேணிடைப் போக்கிய பொருள் எனக்கு இன்று போந்ததால்.’ |
‘ஆக்கிய பொலங்கழல் அரசன் - பொன்னாற் செய்த வீரக் கழலை அணிந்த தயரதன்;பண்டு - முன்பே; பாக்கியம் புரிந்திலாப் பரதன் தன்னை- (அரசாட்சி ஏற்கும்)பாக்கியம் செய்யாத பரதனை; ஆணையால்- கட்டளையால்; தேக்கு உயர் கல் அதர் -தேக்கு மரங்கள் நிரம்பிய மலைவழியில்; சேணிடை - வெகுதூரத்தில் (கேகய நாட்டுக்கு); கடிது - விரைவாக; போக்கிய - (செல்லும்படி) அனுப்பிவைத்த; பொருள் - காரணம்; இன்று எனக்கு -; போந்தது - தெரியவந்தது. பரதனைக் கேகய நாட்டிற்கு அனுப்பியது, “ஆணையின் நினது மூதாதை, ஐய! நிற் காணியவிழைவதோர் கருத்தன்; ஆதலால் .......கேகயம் புக........போதி” என்றனன்’ (1309.)என முன்னர் வந்துள்ளது. கேகய தேசத்தரசனான பரதனது மாமன் யுதாசித்து அழைக்கப் பரதனைத்தயரதன் அனுப்பினான். யுதாசித்து அழைப்பின் பேரில்தான் அனுப்பினானேயன்றித் தானாக அனுப்பவில்லைதயரதன். ஆயினும் அச்செயலைத் தன்கருத்திற் கேற்ப வளைத்துக்கொண்ட மந்தரை ‘இராமனுக்கு முடிசூட்டப் பரதன் தடையாக இருப்பானோ என்று கருதியே தயரதன் பரதனைக் கேகயத்திற்கு விரைவாக அனுப்பிவைத்தான்’ என்று கூறினாள். பரதன்பால் பிரிவு காட்டினாள் போன்று பேசிய மந்தரை ‘கோசலை வாழ்ந்தனள்’ என்றாற் போல, தயரதனும் திட்டமிட்டே இராமனுக்கு முடிசூடும் செயலை நடத்தத் தொடங்கினான்என்றும் கூறி, கைகேயியின் மனத்தில் மாசு ஏற்றினாள். கல்றவழியில் அனுப்பினான்; வெகுதூரத்தில்அனுப்பினான்; விரைவாக அனுப்பினான் என்றெல்லாம் சொற்களை அடுக்கிப் பெய்து மந்தரையின் சொற் சாதுரியத்தைக் கம்பர் காட்டிய அருமை அறிந்து இன்புறத் தக்கது. 67 |