மந்தரை மாற்றத்தால் சீற்றமுற்ற கைகேயி கடிந்து உரைத்தல் கலித்துறை 1469. | வாய் கயப்புற மந்தரை வழங்கிய வெஞ் சொல், காய் கனல்தலை நெய் சொரிந்தென, கதம் கனற்ற, கேகயர்க்கு இறை திருமகள், கிளர் இள வரிகள் தோய், கயல் கண்கள் சிவப்புற நோக்கினள், சொல்லும்; |
வாய் கயப்புற - வாய் கசக்கும்படி; மந்தரை - கூனி; வழங்கிய - கூறிய; வெஞ்சொல் - கொடிய வார்த்தை; காய் - எரிகின்ற, கனல்தலை- நெருப்பிடத்தில்; நெய் சொரிந்தென - நெய் ஊற்றினாற் போல; கதம் - கோபத்தை; கனற்ற - மேலும் தூண்டி எரியச்செய்ய; (அதனால்) . கேகயர்க்கு இறைதிருமகள் - கேகய நாட்டு அரசனது அழகுப் பெண்ணான கைகேயி; கிளர் இளவரிகள் தோய் -எழுந்த இளங்கோடுகள் பொருந்திய; கயல் கண்கள் - கயல் போன்ற கண்கள்; சிவப்புற- (சினத்தால்) செம்மை அடைய; நோக்கினள் - பார்த்து; சொல்லும் - பேசத் தொடங்கினாள் (மேல் தொடரும்) நெய் விடவிட நெருப்பு எரிதல் போல மந்தரை பேசப் பேச கைகேயிக்குச் சினம் மூண்டது. இராமனிடம்சினம் மிகுந்து கூறிய சொற்கள் ஆதலின் சொன்ன அவளுக்கும் வாய் கசக்கும் என்றார். ‘கைக்குமே, தேவரே தின்னினும் வேம்பு’ என்றது (நாலடி. 95) போல, இனி வருவன கைகேயி மாற்றமாம். 71 |