1471.‘எனக்கு நல்லையும் அல்லை நீ;
     என் மகன் பரதன் -
தனக்கு நல்லையும் அல்லை; அத்
     தருமமே நோக்கின்,
உனக்கு நல்லையும் அல்லை;
     வந்து ஊழ்வினை தூண்ட,
மனக்கு நல்லன சொல்லினை -
     மதி இலா மனத்தோய்!

     ‘மதி இலா மனத்தோய் - அறிவில்லாத நெஞ்சினை உடையவளே!;
நீ எனக்கு நல்லையும்அல்லை - நீ எனக்கு நன்மையைச் செய்பவள்
அல்லள்;  என்மகன் பரதன் தனக்கு நல்லையும்அல்லை - என்
மகனாகிய பரதனுக்கு நன்மையைச் செய்பவளும் அல்லள்;  அத் தருமமே
நோக்கின்-
அந்த அரச தருமத்தை ஆராய்ந்தால்;  உனக்கு  நல்லையும்
அல்லை -
உனக்கு நன்மையைச்செய்து கொள்பவளும் அல்லள்; ஊழ்
வினை வந்து தூண்ட -
(நீ) செய்த முன்னைய வினை (விதிவழியாக)
வந்து உன்னைச் செலுத்த;  (அதனால்) மனக்கு  நல்லன சொல்லினை -
உன் மனத்துக்கு இதமானவற்றைச்சொன்னாய்.’

     மந்தரை சொல்லியபடி  நடந்தால் பழி,  பாவங்களுக்கு இடனாதலின்
‘எனக்கும், என் மகன்பரதனுக்கும் நன்மையன்று’ என்றாளாம். அன்றி, அரச
தருமத்தை ஆராயின் இது ஒரு சதிவேலை என எண்ணப்படுதலின்
மந்தரைக்கே தீதாய் முடியும் என்றும் கூறினாள் கைகேயி. புத்தி பூர்வமாக
இல்லாவிடினும் இத்தகையமாறுபாடான செயல்கள் விதிவழியாகவே நிகழும்
ஆதலின் ‘ஊழ் வினை தூண்ட’ என்ற சொன்னாள். மனக்கு- மனத்துக்கு
அத்துக் கெட்டது. இதனாதல் முன்பு, “இராமனைப் பயந்த எற்கிடருண்டோ”
(1453) என்றுகூறிய கைகேயி, “என்மகன் பரதன்” என்று பரதனைத்
தன்மகன் என்று கட்டுகிற அளவுக்கு மந்தரையின்போதனையால்
மனமாற்றம் அடைந்திருக்கிறாள் என்பது புனலாகும்.                 73