1472.‘பிறந்து இறந்து போய்ப் பெறுவதும்,
     இழப்பதும், புகழே;
நிறம் திறம்பினும், நியாயமே
     திறம்பினும், நெறியின்
திறம் திறம்பினம், செய் தவம்
     திறம்பினும், செயிர் தீர்
மறம் திறம்பினும், வரன்முறை
     திறம்புதல் வழக்கோ?

     ‘பிறந்து இறந்து போய் - (மக்கள்) பிறந்து இறந்து சென்று;
பெறுவதும் இழப்பதும்புகழே - அடைவதும், இழந்துவிடுவதும் புகழே
ஆகும்;  நிறம் திறம்பினும் - ஒளி மாறுபட்டாலும்; நியாயம் திறம்
பினும் -
நேர்மை மாறுபடினும்;  நெறியின் திறம் திறம்பினும் -
நல்வழியின் கூறு மாறுபடினும்; செய் தவம் திறம்பினும் - செய்யும் நல்ல
தவம் மாறுபடினும்; செயிர்தீர் மறம் திறம்பினும் - குற்றம் நீங்கிய வீரம்
மாறுபடினும்; வரன்முறை -தம் குலத்தினது மரபு முறைமை; திறம்புதல் -
மாறுபடுதல்;  வழக்கோ? - நியாயமோ?’

     எதை இழந்தாலும் புகழை இழக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பாரம்பரிய முறை தவறிநடந்தால் புகழுக்குக் கேடு உண்டாகும்.  ஆதலால்
வழக்கன்று என்றாள். “தோன்றிற் புகழொடு தோன்றுக” (குறள்) என்பதாம்.
நிறம் - ஒளி - “தாம் உள காலத்து  எல்லாரானும் நன்கு மதிக்கப் படுதல்”.
(குறள். 653. பரி. உரை) ‘வசை என்ப வையத்தார்க்கெல்லாம் இசை என்னும்
எச்சம் பெறா அவிடின்(குறள்238) என்னும் வாக்கு நினையத்தக்கது.
வரன்முறை  திறம்பாமை’ பரதன் அரசு ஏற்பதில் நியாயப்படுத்தப்பட்டால்
மற்றவை திறம் புதலைப் பற்றி நான் கவலைப்படமாட்டேன் என்ற அளவில்
கைகேயியின் மன மாற்றம்நமக்கு இங்கே புலனாகும். இதுவே கூனியின்
முதல் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி எனலாம்.  செய்தவம் மேற்கதி,
வீடுபேறுகளைக் கூட்டுவிப்பது  இம்மைப் புகழை நோக்க அவற்றைக்
கைவிடுனும் விடலாம்என்ற கைகேயியின் மனமாற்றம் இங்கே
சிந்தித்தற்குரியதாகும்.                                          74