1475. | ‘மூத்தவற்கு உரித்து அரசு எனும் முறைமையின் உலகம் காத்த மன்னனின் இளையன் அன்றோ கடல்வண்ணன்? ஏத்து நீள் முடி புனைவதற்கு இசைந்தனன் என்றால், மீத் தரும் செல்வம் பரதனை விலக்குமாறு எவனோ? |
‘மூத்தவற்கு அரசு உரித்து - வயதில் முதிர்ந்தவனுக்கு அரசு உரிமையானது; எனும்முறைமையின் - என்கின்ற முறையை வைத்துப் பார்த்தால்; உலகம் காத்த மன்னனின் -உலகத்தை ஆளுகின்ற தயரதனை விட; கடல் வண்ணன் - கடலின் நீல நிறத்தையுடைய இராமன்; இளையன் அன்றோ - வயதில் இளையவன் அல்லனோ?; (தன்னைவிட வயதில் இளைய இராமன்)ஏத்தும் நீள்முடி புனைவதற்கு - பாராட்டப் பெறும் நீண்ட மகுடத்தைச் சூடுதற்கு; இசைந்தனன்என்றான் - தயரதன் சம்மதித்தான் என்றால்; மீத்தரும் செல்வம் - மேம்பாட்டைத்தருகின்ற அரசச் செல்வம்; பரதனை எவன் விலக்கு மாறு? - இராமனில் இளைய பரதனை (உரியனல்லன்என்று) நீக்குவது எவ்வாறு?’ தயரதன், இராமன், பரதன் என்ற மூவருள் வயது முதிர்ந்த தயரதன் இருக்கும்பொழுது இராமன்அரசாளலாம் என்றால், வயதில் மூத்த இராமன் இருக்கும்பொழுது பரதன் ஏன் அரசாளக் கூடாது என்பதுகூனியின் வாதம். கைகேயி ‘முறைமையன்று’ என்பதனையே கூறி மந்தரையைக் கடிந்தாள். ஆதலின்,அதனை முதலில் தன் பேச்சால் மறுத்துக் கூறி, இதில் முறைமை இருக்கிறது என்பதைக் காட்டிக் கைகேயியைமுழுமையாக மனமாற்றம் செய்ய முற்பட்டான். ‘மூத்தவன்’ என்பது மூத்த பிள்ளை. அண்ணன் என்னும் பொருள் உடையது. அதுபற்றியே மூத்தவனுக்குப் பட்டம் என்னும் முறைமை நிகழ்கிறது - அவ்வாறுகாணுங்கால் எவ்வாற்றானும் பரதனை அது பற்றாது. ஆனால், மந்தரை தன் சொற் சாதுர்யத்தால் மூத்தவன்என்பதற்கு வயதில் முதிர்ந்தவன் என்று பொருள் கொண்டு நிறுவிக் கைகேயியை வளைத்தாள். நீள்முடி- உயர்ந்த மகுடம். 77 |