1479.‘சிந்தை என் செயத் திகைத்தனை?
     இனி, சில நாளில்,
தம்தம் இன்மையும், எளிமையும்,
     நிற்கொண்டு தவிர்க்க,
உந்தை, உன் ஐ, உன் கிளைஞர், மற்ற
     உன் குலத்து உள்ளோர்,
வந்து காண்பது உன் மாற்றவள்
     செல்வமோ? மதியாய்!

     ‘மதியாய்! - அறிவுடையவளே!; என்செய - என்ன செய்யலாம் என்று
கருதி;சிந்தை - (உன்) மனத்தில்; திகைத்தனை? - தடுமாற்றம்
அடைந்தாய்; இனி- வருங்காலத்து; சில நாளில் - சில நாள்களில்;
உந்தை - உன் தந்தை; உன் ஐ - உன் அண்ணன்; உன் கிளைஞர் -
உன் பிறந்த வீட்டுக்கு உறவினர்கள்; மற்று - மேலும்;  உன் குலத்து
உள்ளோர் -
உன் குலத்தைச் சேர்ந்தவர்கள் (ஆகியோர்); தம்தம்
இன்மையும் -
தங்கள் தங்களது  வறுமையையும்; எளிமையையும் -
தாழ்ச்சியையும்; நிற்கொண்டு - உன்னைக் கொண்டு; தவிர்க்க - போக்கிக்
கொள்ளலாம் என்று; வந்து - இங்கே வந்து; காண்பது - (நீ அதற்கு
முடியாமல் உள்ளபடியால்)பார்ப்பது;  உன் மாற்றவள் செல்வமோ -
உன் சக்களத்தியின் செல்வத்தையோ?                          81