1482. ‘கெடுத்து ஒழிந்தனை உனக்கு அரும்
     புதலவனை; கிளர் நீர்
உடுத்த பாரகம் உடையவன்
     ஒரு மகற்கு எனவே
கொடுத்த பேர் அரசு, அவன் குலக்
     கோமைந்தர்தமக்கும்.
அடுத்த தம்பிக்கும் ஆம்;
     பிறர்க்கு ஆகுமோ?’ என்றாள்.

     ‘உனக்கு அரும் புதல்வனை - உன்னுடைய பெறுதற்கரிய மகனாகிய
பரதனை;  கெடுத்துஒழிந்தனை - வீணாக்கி அழிந்தாய்;  கிளர்நீர் -
மேலெழும்புகின்ற  நீரையுடைய கடலை;  உடுத்த பாரகம் - ஆடையாக 
உடுத்த நிலவுலகத்தை; உடையவன் - தன்னுடைமையாகப்பெற்ற
சக்கரவர்த்தி தயரதன்;  ஒரு மகற்கு எனவே - ஒப்பற்றதன் இராமனுக்காக;
கொடுத்த பேர் அரசு - ஆட்சியுரிமை கொடுத்துவிட்ட கோசல அரசு;
அவன் குலக் கோமைந்தர்தமக்கும் - இராமன் குலத்தில் தோன்றும்
அரசகுமார்களுக்கும்;  அடுத்த தம்பிக்கும் -இராமனை எப்பொழுதும்
சார்ந்து சிடக்கின்ற தம்பியாகிய இலக்குமணனுக்கும்;  ஆம் -ஆகும்; 
பிறர்க்கு ஆகுமோ? - (அப்படியல்லாது) வேறு பிறருக்கு (பரதனுக்கு) மீள
வருமோ? (வராது);’ என்றாள் - என்று கூறி முடித்தாள்.

     இராமனுக்குப் பின் பரதன் ஆள்வான் என்று நினைத்தாயாயின்
அதுவும் இயலாது என்றாள் கூனி. இப்பொழுதே பரதனை அரசனாக்குவதே
விவேகம்; இல்லையேல் எப்போதும் பரதன் அரசனாக இயலாது என்றுகூறி
முடித்தாள் கூனி.  மகன்மேல் உள்ள பாசம், பிறந்த வீட்டுப் பாசம் இவற்றை
அடியாக வைத்து மந்தரை கைகேயியின் மனத்தைத் திரித்தாள் என்க.
“பிறர்க்கும் ஆகுமோ” என்ற பாடம்  ஓசைக்குஒத்து வராது ஆதலின்
கொள்ளப் பெறவில்லை.                                        84