கைகேயி மனம் மாறுதல்  

1483.தீய மந்தரை இவ் உரை செப்பலும், தேவி
தூய சிந்தையும் திரிந்தது - சூழ்ச்சியின் இமையோர்
மாயையும், அவர் பெற்ற நல் வரம் உண்மையாலும்,
ஆய அந்தணர் இயற்றிய அருந் தவத்தாலும்.

     தீய மந்தரை - கொடிய கூனி;  இவ் உரை செப்பலும் - இவ்
வார்த்தைகளைச்சொன்ன அளவிலே;  சூழ்ச்சியின் இமையோர்
மாயையும் - (எதை எவ்வாறு நடத்துவது என்ற) ஆலோசனையில் சிறந்த
இமையோர்களது மாயையினாலும்; அவர் பெற்ற - தேவர்கள் (திருமாலிடம்)
பெற்றுக்கொண்ட; நல்வரம் - நல்ல வரம்; உண்மையாலும் -
இருக்கின்றபடியாலும்;ஆய அந்தணர் - அறவோர் ஆகிய வேதியர்;
இயற்றிய - செய்த; அருந் தவத்தாலும் - செய்தற்கு அரிய தவத்தாலும்;
தேவி தூய சிந்தையும் - கைகேயியின் தூய மனமும்; திரிந்தது - மந்தரை
வழியில் மாறியது.

     ‘சூழ்ச்சியின்’ என்பதற்கு மந்தரையின் சூழ்ச்சியினால் என்றும்பொருள்
உரைப்பர். தேவர்கள் மாயையே கூனியாய் வந்தது  என்பது  ஒரு வழக்கு,
இனி இராமன்பால்அளவுகடந்த பேரன்புடையவளும் தூயவளும் ஆகிய
கைகேயித் தாய் கேவலம் கூனியால் மனமாற்றம் அடையக்கூடியஅளவுக்குச்
சிறுமையுடைய சக்கரவர்த்தினியல்லள்; அவள் மனம் திரிவதற்கு
அகக்காரணம் ஆகத் தேவர்மாயையும் அவர் பெற்ற வரமும், முனிவர்களது
(இராவணாதிகள் அழிய வேண்டும்  என்று இயற்றிய)அருந் தவமுமே
இருந்தன. அதனாலேயே மனமாற்றம் அடைந்தாள் என்றார் என்க.
‘இவ்வுரை’ என்றது,‘மூத்தவர்க்குரித்து  அரசு’ (1475)  என்பது தொடங்கி,
‘கெடுத்தொழிந்தனை’ (1482) என்பதுவரை உள்ள எட்டுச் செய்யுள்களில்
உள்ள அத்தனையையும் குறிப்பிடும். பெண்களுக்கே விடலாற்றாத
பிறந்தவீட்டுப் பாசம் கூனியால் பெரிதும் எடுத்துப் பேசப்பட்டது.
‘முறைமை அன்று’ என்ற கைகேயிக்கு‘முறைமை உண்டு’ எனக் கூனி
விளங்கினாள்.  காரிய காரணங்களோடு இயைத்துக் கூனி தன் கருத்தைக்
கைகேயி ஏற்குமாற செய்தாளாம்.  இமையோர் வரம் என்றது,  பாற்கடலிற்
கண்வளரும் பரந்தாமனிடம்இந்திராதி தேவர்கள் வேண்டியதும், அப்பரமன்
“வளை மதில் அயோத்தியில் வருதும் தாரணி” என்றும், “தசரதன்
அனையவர் வரமும், வாழ்வும், ஓர், நிசரத கணைகளால் நீறு செய்ய யாம்,
கசரத துரகமாக்கடல்கொள் காவலன்,  தசரதன் மதலையாய்  வருதும்
தாரணி” என்றும்,  உலைவுறும் அமரருக் குரைத்தவார்த்தையை. (200,201)
‘தூய சிந்தையும் திரிந்தது” உம்மை சிறப்பும்மை. ‘திரியாத மனமும்’என
அதன் உயர்வு சிறப்பினை விளக்கி நின்றது.                        85