1484.அரக்கர் பாவமும்,
     அல்லவர் இயற்றிய அறமும்
துரக்க, நல் அருள் துறந்தனள்
     தூ மொழி மடமான்;
இரக்கம் இன்மை அன்றோ,
     இன்று, இவ் உலகங்கள், இராமன்
பரக்கும் தொல் புகழ்
     அமுதினைப் பருகுகின்றதுவே?

     அரக்கர்பாவமும் - இராக்கதர் (செய்த) தீவினையும்; அல்லவர்
இயற்றியஅறமும் -
தேவரும் முனிவரும் செய்த நல்வினையும்; துரக்க-
(மறைந்து) ஏவுதலால்;நல் அருள் துறந்தனள்- நல்ல இரக்கத்தைக்
கைவிட்டாள்;  தூ மொழி மடமான் -தூய மொழிகளைப்பேசும்
இளைய மான்போலும் கைகேயியின்;  இரக்கம் இன்னை அன்றோ -
கருணை இல்லாத தன்மையால்அல்லவா; இவ் உலகங்கள்- இந்த உலகம்
எல்லாம்;  இன்று - இன்றைக்கும்; இராமன்- இராமபிரானது;  பரக்கும் -
எங்கும் பரந்து  செல்லும்;  தொல்புகழ்அமுதினை- பழமையாகிய புகழ்
என்கின்ற அமுதத்தை; பருகுகின்றதுவே - (செவிகளால்)உண்டு(ஆனந்தம்
அடைகின்றது)!

     கைகேயியின் மனமாற்றம் நிகழவில்லையானால் இராமாயண காவியம்
தான்றாதாம்; இராமன்புகழை அனுபவிக்க உலகத்திற்கு வாய்பு  இல்லையாம்.
கைகேயி  மனம் திரிந்ததும் நல்லதாயிற்று. இராமன் புகழை உலகம் உண்டு
பருகித் தேக்கெறிய உதவி செய்தது  என்றார். புகழை அமுதென்றார்.
கேட்போர்க்குப் பிறவா நெறியாகிய பரமபதம் தந்து அருளுதலின், இங்கும்
‘அரக்கர் பாவமும் அல்லவர்  இயற்றிய அறமும் ஆகிய பெரிய
காரணங்களே உள் நின்று தூமொழி மடமானை இரக்கம் அற்றவளாகச்
செய்தது என்றது காண்க. கைகேயியால் அல்லவா சிறையிருந்தவள் ஏற்றம்
செப்பும்  ஸ்ரீராமகதை கிடைத்தது என்று  தீமையிலும் நன்மை தோன்றக்
கூறினார்.                                                    86