மனமாற்றம் அடைந்த கைகேயி பரதன் முடிசூட உபாயம் கேட்டல் 1485. | அனைய தன்மையள் ஆகிய கேகயன் அன்னம், வினை நிரம்பிய கூனியை விரும்பினள், நோக்கி, ‘எனை உவந்தனை; இனியை என் மகனுக்கும்; அனையான் புனையும் நீள் முடி பெறும்படி புகலுதி’ என்றாள். |
அனைய தன்மையள் ஆகிய - அப்படிப்பட்ட மனம் மாறின தன்மை உடையளாகிய; கேகயன்அன்னம் - கைகேயி; வினை நிரம்பிய கூனியை - சூழ்ச்சி நிறைந்தவளாகிய மந்தரையை;விரும்பினள் நோக்கி - விரும்பிப் பார்த்து; ‘எனை உவந்தனை - என்னிடம்பிரியம் வைத்துள்ளாய்; (நீ) என் மகனுக்கும் இனியை - நீ என்மகனாய பரதனுக்கும் நல்லவளே; அனையான் - அந்தப் பரதன்; புனையும் நீள்முடி - அழகு செய்யப் பெற்ற உயர்ந்தமுடியை; பெறும்படி - அடையும் விதத்தை; புகலுதி - சொல்லுக;’ என்றாள். எடுத்த காரியத்தைஎப்படி முடிப்பது என்பதில் தேர்ந்தவள் கூனி, தன் முதுகில் உண்டையடித்தான்என்பதனால் வஞ்சம் கொண்டு பழி வாங்கும் உணர்வுடன் இராமனைக் காட்டுக்கு அனுப்புவதே அவள் நோக்கம்; பரதனைப் பற்றி அவளுக்குக் கவலை இல்லை; ஆயினும் தன் நோக்கம் நிறைவேறக் கைகேயியையும்பரதனையும் கருவியாக அவள் பயன்படுத்திக்கொண்டாள். இதனை முடிக்கச் சதரப்பாடான சொற்றிறமையும். கைகேயியின் பலவீனமும் எது என்பதறிந்துஅவளைப் பயனுறுத்தி, பயமுறுத்தி மனம் மாறித் தன் கருத்திற்கிசையச் செய்து கொண்டதும்ஆகிய இவையே அவளை ‘வினை நிரம்பிர கூனி’ எனச் சொல்வதற்குப் போதுமானவை. இவ்விடத்தில், ‘தீவினை நிரம்பிய கூனி’ என்ற பொருள் சிறக்குமேற் கொள்க. ‘முன் என் மகன் பரதன்’(1471) என்றது போல இங்கே ‘என் மகன்’ என்று கைகேயி கூறுவது காண்க. இனி, பரதனுக்கு அரசு பெறுமாறுஎவ்வாறு? என்று அதற்குரிய வழி (உபாயம்) கூறுமாறு கூனி யையே கேட்கிறாள் கைகேயி. கூனியின்கட்டுப்பாட்டில் கைகேயி வந்துவிட்டாள் என்பதை இது காட்டுகிறது. 87 |