மந்தரை உரைத்த உபாயம் 1487. | ‘நாடி ஒன்று உனக்கு உரைசெய்வென்; நளிர் மணி நகையாய்! தோடு இவர்ந்த தார்ச் சம்பரன் தொலைவுற்ற வேலை ஆடல் வென்றியான் அருளிய வரம் அவை இரண்டும் கோடி’ என்றனள், உள்ளமும் கோடிய கொடியாள். |
உள்ளமும் கோடிய கொடியாள் - உடம்பு வளைந்து கூனி யானாற்போல; உள்ளமும் கோணிப்போனகொடியவளாய மந்தரை; ‘நளிர்மணி நகையாய்! - குளிர்ந்த முத்துமணியைப் போன்ற புன்சிரிப்பை உடையவளே!; உனக்கு -; ஒன்று நாடி உரைசெய்வென் - ஒரு செய்தியை ஆராய்ந்துசொல்லுகிறேன்; தோடு இவர்ந்த தார்ச் சம்பரன்- பூவிதழ் செறிந்த வெற்றிமாலை அணிந்தசம்பராசுரன்; தொலைவுற்ற வேலை - போரில் (தயரதன்பால்) தோல்வியுற்று அழிந்தபோது;ஆடல் வென்றியான் - விளையாட்டாகப் போரில் வெற்றி சூடும் தயரதன்; அருளிய -உனக்குக் கொடுத்த; வரம் அவை இரண்டும் - இரண்டு வரங்களாகிய அவற்றை; கோடி’ - (இப்போது அவனிடம்) கொள்வாயாக;’ என்றனள் - என்று (உபாயம்) கூறினாள். சம்பராகர யுத்தத்தில் தயரதனுக்குத் தேர்ச்சாரதியாக இருந்தவள் கைகேயி. அப்போது ஓர்அபாயத்தில் தயரதனை மீட்டதற்கு அவன் உவந்து அவளுக்கு இரு வரம் பெறுக எனக் கொடுத்தான். அவள்வேண்டும்போது பெறுவதாகச் சொல்லி அப்போது கொள்ளாது அவ்வரங்களை விட்டாள்; அவற்றை அவன்பால் இப்போது கேட்டுப் பெறுக என்றாள் மந்தரை. ‘அருளிய’ என்றதனால் தயரதன் தானே உள்ள முவந்துதந்த வரங்கள், மறுக்க வொண்ணாதவை என்பது போதரும். ‘உள்ளமும்’ என்ற உம்மை எச்சவும்மை; உடலேயன்றி எனலின் இறந்தது தழீஇய எச்சவும்மையாம். விளையாட்டுப் போல் வெற்றி பெறுபவன்என்பதனை ஆடல் வென்றியான் என்றார் - போர்த் தொழில் எளிது என்பது தோன்ற. இனி ஆடல்- போர்த் தொழிலில். வென்றியான் - வெற்றிசூடுபவன் எனவும் உரைக்கலாம். 89 |