கூனியைக் கைகேயி மகிழ்ந்து பாராட்டுதல்  

1489.உரைத்த கூனியை உவந்தனள்,
     உயிர் உறத் தழுவி,
நிரைத்த மா மணி ஆரமும்
     நிதியமும் நீட்டி,
‘இரைத்த வேலை சூழ் உலகம் என் ஒரு
     மகற்கு ஈந்தாய்;
தரைக்கு நாயகன் தாய் இனி நீ’
     எனத் தணியா.

     உரைத்தகூனியை - (இவ்வுபாயம்) சொன்ன மந்தரையை;  (கைகேயி)
உவந்தனள் -மகிழ்ந்து;  உயிர்உறத் தழுவி - இறுகத் தழுவிக் கொண்டு;
மாமணி நிரைத்த ஆரமும்நிதியமும் நீட்டி -சிறந்த மணிக்கற்கள்
வரிசையாக வைத்துச் செய்யப் பெற்ற மாலையும்,ஏனைய செல்வங்களும்
அளித்து; ‘என் ஒரு மகற்கு - என் ஒப்பற்ற
புதல்வனுக்கு;இரைத்த
வேலை சூழ் உலகம்
- ஒலிக்கும் கடல் சூழ்ந்த உலகத்தை; ஈந்தாய்-
கொடுத்தாய்; (ஆதலால்) இனி நீ தரைக்கு நாயகன் தாய்’-
இனிமேல்நீயே பூமிக்கரசனாகிய பரதனின் தாய் ஆவாய்;’ என- என்று; 
தணியா - தாழ்ந்துபாராட்டி; (தொடரும்).

     ‘பரதனுக்கு நான் பெற்ற தாய்; இன்று அரசை அவனுக்குப் பெற்றுத்
தந்ததால் பரத அரசனுக்குநீயே தாய்’ என்று கூனியைப் பாராட்டினாள்.
தழுவி,  நீட்டி தணியா என்ற வினையெச்சங்கள் அடுத்தபாட்டில் முடியும்.
தணிதல் - தாழ்தல். ‘தணியா’ என்பது ‘செய்யா’ என்னும் வாய்பாட்டில் வந்த
வினையெச்சம். அது உடன்பாட்டுப் பொருளது. தணிந்து - தாழ்ந்து என்றாம்.
தன்னைத் தாழ்த்திக்கொண்டு தயால்லள் என்று சொல்லி,  அவளைத் தாய்
என்று உயர்த்திப் பாராட்டினாளாம்.                                91