1493. | தா இல் மா மணிக் கலன் மற்றும் தனித் தனி சிதறி, நாவி ஓதியை நானிலம் தைவரப் பரப்பி, காவி உண் கண் அஞ்சனம் கான்றிடக் கலுழா, பூ உதிர்ந்தது ஓர் கொம்பு எனப் புவிமிசைப் புரண்டாள். |
மற்றும் தா இல் மா மணிக் கலன் - பின்னும் குற்றமற்ற பெரிய மணிகளால் ஆகியஅணிகளையும்; தனித்தனி சிதறி - வேறு வேறாகச் சிதைத்தெறிந்து; நாவி ஓதியை -புழுகுநெய் பூசப்பட்ட கூந்தலை; நால்நிலம் தைவரப் பரப்பி - தரையிலே புரளுமாறு பரப்பிக்கொண்டு காவி உண்கண் - நீலமலர் போன்ற மையுண்ட கண்கள்; அஞ்சனம் கான்றிட - மைகரைந்து சிந்தும்படி; கலுழா - கண்ணீர்விட்டு அழுதுகொண்டு; பூ உதிர்ந்தது ஒர்கொம்பு என - மலர்களை யெல்லாம் உதிர்த்துவிட்ட ஒரு வெறுங்கொம்புபோல; புவிமிசைப்புரண்டாள் - தரைமேல் விழுந்து உருண்டாள். மங்கலப் பொருள்கள் எல்லாவற்றையும் களைந்துவிட்டு அழுத கைகேயியின்தோற்றம் பின்னே தான் அடையப் போகும் கைம்மை நிலையை இப்பொழுதே அவள் மேற்கொண்டதைக்குறிப்பாற் புலப்படுத்தியது நானிலம் - ஈண்டு நால் வகை நிலத்தைச் சுட்டாமல் தரையைச்சுட்டியது. புவி - தரை. அணிகலன்கள் நீங்கிய நிலையில் மகளிர்க்குப் பூ உதிர்த்த கொம்பைஉவமை கூறுவதை ஆறுசெல் படலத்தில் “தாஅரு நாண் முதல் அணி அலால், தகை மே வரு கலங்களை வெறுத்த மேனியர், தேவரும் மருள்கொளத் தெரியும் காட்சியர், பூ உதிர் கொம்பு என, மகளிர் போயினர்” | (2277) |
என்னும் பாட்டிலும் காணலாம். 3 |