1496. | வாயிலில் மன்னர் வணங்கி நிற்ப, வந்து ஆங்கு, ஏயின செய்யும் மடந்தைமாரொடு ஏகி, பாயல் துறந்த படைத் தடங்கண் மென் தோள், ஆயிழைதன்னை அடைந்த ஆழி மன்னன். |
மன்னர் வணங்கி வாயிலில் நிற்ப - தன்னுடன் வந்த அரசர்கள் தொழுது அந்தப்புரவாயிலில் நிற்க; ஆங்கு வந்து - அவ்விடத்தில் ஓடிவந்து; ஏயின செய்யும் மடந்தைமாரொடுஏகி - கட்டளையிட்ட வற்றைச் செய்யும் பணிப்பெண்களோடு சென்று; பாயல் துறந்த - படுக்கையைவிட்ட; படைத் தடங் கண் - வேல் போலும் கூரிய பெரிய கண்களையும்; மெல்தோள்- மென்மையான தோள்களையும் உடைய; ஆய் இழைதன்னை - கைகேயி; அடைந்த ஆழிமன்னன்- சேர்ந்த அந்தச் சக்கரவர்த்தி (எடுக்கலுற்றான் என அடுத்த பாடலோடு முடியும்) தயரதன் மாளிகையின் உள்ளே சென்று, தரையிலே அலங்கோலமாகக் கிடந்த கைகேயியைக் கண்டான்என்பது கருத்து. அந்தப்புரத்தில் அயல் ஆடவர் செல்ல இயலாதாகலின் மன்னர் வெளியே நின்றனர். ஆயிழை - பெண் என்னும் பொருட்டாய் நின்றது, கைகேயி அணிகலன்களைத் துறந்து கிடத்தலின். 6 |