கைகேயியைத் தயரதன் எடுத்தலும், அவள் மண்ணில் வீழ்தலும் 1497. | அடைந்து , அவண் நோக்கி, ‘அரந்தை என்கொல் வந்து தொடர்ந்தது?’ எனத் துயர்கொண்டு சோரும் நெஞ்சன், மடந்தையை, மானை எடுக்கும் ஆனையேபோல், தடங்கை கள் கொண்டு தழீஇ, எடுக்கலுற்றான். |
அவண் அடைந்து - அங்குச் சென்று; நோக்கி - கைகேயியின் நிலையைக் கூர்ந்துபார்த்துத் (துணுக்கம் கொண்டு); அரந்தை என் கொல் வந்து தொடர்ந்தது என - துன்பம்யாது வந்து சேர்ந்தது என்று எண்ணி; துயர்கொண்டு சோரும் நெஞ்சன் - வருத்தமடைந்து வாடும் மனமுடையவனாய்; மானை எடுக்கும் ஆனையே போல் - பெண்மானைத் துதிக்கையால் யானையைப்போல; தடங்கைகள் கொண்டு - தன் பெரிய கைகளால்; மடந்தையைத் தழீஇ - அவளைக் கட்டித் தழுவி; எடுக்கல் உற்றான் - தூக்கத் தொடங்கினான். |