1498. | நின்று தொடர்ந்த நெடுங் கைதம்மை நீக்கி, மின் துவள்கின்றது போல, மண்ணில் வீழ்ந்தாள். ஒன்றும் இயம்பலள்; நீடு உயிர்க்கலுற்றாள் - மன்றல் அருந் தொடை மன்னன் ஆவி அன்னாள். |
மன்றல் அருந் தொடை மன்னன் - மணங் கமழும் அரிய மலர் மாலையைச் சூடியதயரதனுடைய; ஆவி அன்னாள் - உயிர் போன்ற வளான கைகேயி; நின்று - தன் நிலையில்மாறாது நின்று; தொடர்ந்த - தன்னைத் தழுவ நீண்ட; நெடுங் கை தம்மை நீக்கி -(அரசனுடைய) நீண்ட கைகளை விலக்கி; மின் துவள்கின்றது போல - மின்னற் கொடி துவண்டுவீழ்தல் போல; மண்ணில் வீழ்ந்தாள் - தரையில் வீழ்ந்து; ஒன்றும் இயம்பலள் -ஒன்றும் சொல்லாமல்; நீடு உயிர்க்கல் உற்றாள்- பெருமூச்சு விடத் தொடங்கினாள். தேவியர் மூவரில் கைகேயியை தயரதன் மிகவும் விழைந்தான் என்பது ‘மன்னன் ஆவி அன்னாள்’என்னும் தொடரால் விளங்குகிறது. மன்னன் துயர் கண்டும் அவள் நெஞ்றசு இளகாமல் இருந்தது தோன்ற‘நின்று’ என்றார். வீழ்ந்தாள், இயம்பலள் - முற்றெச்சங்கள். 8 |