தயரதன் கைகேயியை நிகழ்ந்தது கூறப் பணித்தல் 1499. | அன்னது கண்ட அலங்கல் மன்னன் அஞ்சி, ‘என்னை நிகழ்ந்தது?’ இவ் ஏழு ஞாலம் வாழ்வார், உன்னை இகழ்ந்தவர் மாள்வர்; உற்றது எல்லாம் சொன்னபின் என் செயல் காண்டி; சொல்லிடு’ என்றான். |
அன்னது கண்ட - கைகேயியின் அந்தச் செயலைப் பார்த்த; அலங்கள் மன்னன் -மாலையைப் பூண்ட அரசன்; அஞ்சி - அச்சம் உற்று; ‘நிகழ்ந்தது என்னை - நடந்தது யாது; இஞ் ஞாலம் ஏழில் வாழ்வார் - இவ்வேழுலகங்களில் வாழ்பவர்களுள்; உன்னைஇகழ்ந்தவர் மாள்வர் - உன்னை இழிவுபடுத்தியவர் எவராயிருந்தாலும் என்னால் கொல்லப்பட்டுஅழிவர்; உற்றது எல்லாம் - நிகழ்ந்தது அனைத்தையும்; சொன்ன பின் - நீகூறிய பிறகு; என் செயல் காண்டி - என் செய்கையைப் பார்; சொல்லிடு - காலந்தாழ்த்தாதுசொல்வாய்;’ என்றான்- என்று சொன்னான். இப்பாட்டு, தயரதன் கைகேயியின் அலங்கோல நிலையினைக் கண்டு, கொண்ட துணுக்கத்தினையும்அவள்மீது கொண்ட காதலால் அவளைத் தேற்ற முயலுதலையும் காட்டுகிறது. என்னால் கொல்லப்படுவர்என்பான் மாள்வர் எனத் தன்வினையால் கூறினான். சொல்லிடு; இடு- துணைவினை. 9 |