கைகேயி பண்டைய வரங்களைத் தர வேண்டுதல் 1502. | ஆன்றவன் அவ் உரை கூற, ஐயம் இல்லாள், ‘தோன்றிய பேர் அவலம் துடைத்தல் உண்டேல், சான்று இமையோர்குலம் ஆக, மன்ன! நீ அன்று ஏன்ற வரங்கள் இரண்டும் ஈதி’ என்றாள். |
ஆன்றவன்- குணங்களால் நிறைந்த தயரதன்; அவ் உரைகூற - அந்த உறுதிமொழியைச்சொல்ல; ஐயம் இல்லாள்- தன் கருத்து நிறைவேறும் என்பதில் ஐயம் நீங்கியவளான கைகேயி;‘மன்ன- அரசனே; தோன்றிய பேர் அவலம் துடைத்தல் உண்டேல் -எனக்கு உண்டாகிய பெரியதுன்பத்தைக் களைவது உளதானால்; இமையோர் குலம் சான்று ஆக - தேவர்கூட்டம் சாட்சியாக; நீஅன்று ஏன்ற வரங்கள் இரண்டும் ஈதி- நீ சம்பராசுரப்போர்நிகழ்ந்த அந்நாளில் எனக்களிப்பதாக மனம் இசைந்த இரு வரங்களையும் இப்பொழுதுகொடுப்பாய்;’ என்றாள்-. தயரதன் விருப்பத்திற்கு மாறான வரங்களைத் தான் கேட்கப்போவதால் அவன் வாக்குத் தவறினாலும் தவறலாம் என்பதால் அவனைக் கட்டுப்படுத்த எண்ணித் தேவர் கூட்டம்சான்றாக முன்பு தந்த வரங்களைத் தருமாறு அவனிடம் வேண்டுகிறாள். சான்று - சாட்சி. ஆக - வினையெச்சம். ஈதி - ஏவல் வினைமுற்று. 12 |