மன்னன் வரமளிக்க இசைதல் 1503. | ‘வரம் கொள இத்துணை மம்மர் அல்லல் எய்தி இரங்கிட வேண்டுவது இல்லை; ஈவென்; என்பால் பரம் கெட இப்பொழுதே, பகர்ந்திடு’ என்றான் - உரம் கொள் மனத்தவள் வஞ்சம் ஓர்கிலாதான். |
உரம் கொள் மனத்தவள் - வன்மை கொண்ட நெஞ்சத்தையுடைய கைகேயியின்; வஞ்சம்ஒர்கிலாதான் - வஞ்சனையை ஆராய்ந்து அறியாத தயரதன்; ‘வரம் கொள இத்துணை -(யான் கொடுப்பதாகச் சொன்ன) ‘வரங்களைப் பெற்றுக்கொள்ள இவ்வளவு; மம்மர் அல்லல் எய்தி- தடுமாற்றம் தரும் துன்பம் அடைந்து; இரங்கிட வேண்டுவது இல்லை - நீ வருந்த வேண்டுவது இல்லை; என்பால் பரம் கெட - என்னிடத்துள்ள மனச்சுமை நீங்கும்படி; இப்பொழுதேஈவென் - இப்பொழுதே தருவேன்; பகர்ந்திடு - சொல்வாய்;’ என்றான் -. இயம்பில் மென்மையான கைகேயியின் மனம் கூனியின் சொல்லால் மாறி இப்பொழுது வன்மைகொண்டிருப்பதால் ‘உரங்கொள் மனத்தவள்’ என்றார். கைகேயியின் மீது கொண்ட அதிக அன்பால்அவள் சொற்களில் உள்ள வஞ்சத்தை ஆராய்ந்து அறியாதவனாகத் தயரதன் இருந்தமையால் ‘ஓர்கிலாதான்’ என்றார். ஒர்தல் - ஆராய்தல். 13 |