தயரதன் உற்ற துயரம்  

1505.நாகம் எனும் கொடியாள், தன் நாவின் ஈந்த
சோக விடம் தொடர, துணுக்கம் எய்தா,
ஆகம் அடங்கலும் வெந்து அழிந்து, அராவின்
வேகம் அடங்கிய வேழம் என்ன வீழ்ந்தான்.

     நாகம் எனும் கொடியாள் -  பாம்பு என்று சொல்லத்தக்க
கொடியவளாகிய கைகேயி;  தன் நாவின் ஈந்த - தனது நாக்கினின்றும்
வெளியிட்ட;  சோக விடம் தொடர -துன்பத்தைத் தரும் சொல்லாகிய
நஞ்சு தன்னைப் பற்றிக்கொள்ள;  துணுக்கம்  எய்தா -நடுக்கம் அடைந்து;
ஆகம் அடங்கலும் வெந்து  அழிந்து - தன் உடல் முழுவதும் வெதும்பிச்
சோர்ந்து; அராவின் வேகம் அடங்கிய - நச்சுப் பாம்பினால் தன் ஊக்கம்
தணியப்பெற்ற; வேழம் என்ன - யானை போல; வீழ்ந்தான் - (தயரதன்
கீழே) விழுந்தான்.

     இதனால் கைகேயியின் சொற்களில் இருந்த கொடுமை  கூறப்பட்டது.
சோக விடம் - உருவகம்.துயர்க் காரணம் சொற்களாதலால் ‘நாவின் வந்த
விடம்’ என்று வேற்றுமையணியாகக் கூறினார்.ஆகம் வெந்து வீழ்ந்தான்’ -
சினை வினை முதலோடு முடிந்தது. அராவின் - இன் ஏதுப் பொருளில்
வந்தது.                                                    15