1507. | உலர்ந்தது நா; உயிர் ஓடலுற்றது; உள்ளம் புலர்ந்தது; கண்கள் பொடித்த, பொங்கு சோரி; சலம் தலைமிக்கது; ‘தக்கது என்கொல்?’ என்று என்று அலந்து அலையுற்ற, அரும் புலன்கள் ஐந்தும். |
நா உலர்ந்தது - (தயரதனுக்கு) நாக்கு வறண்டது; உயிர் ஓடல் உற்றது - உயிர்போகத் தொடங்கியது; உள்ளம் புலர்ந்தது - மனம் வாடியது; கண்கள் பொங்குசோரிபொடித்த - கண்கள் மிகுதியாகக் குருதி சிந்தின; சலம் தலைமிக்கது - கவலை மிகுந்தது; அரும் புலன்கள் ஐந்தும் - அரிய ஐந்து பொறிகளும்; தக்கது என்கொல் என்று என்று - செய்யத்தக்கது என்ன என்று எண்ணி எண்ணி; அலந்து அலையுற்ற - கலங்கித் தவித்தன. இதில் தயரதன் அடைந்த அவல மெய்ப்பாடுகள் கட்டப்படுகின்றன. கோபத்தால் கண்கள் இரத்தம்சிந்தின. புலன் - ஈண்டுப் பொறிகளைக் குறித்தது; ஆகுபெயர். ‘அலந்து அலையுற்ற’ என்பதனை ‘அலந்தலைஉற்ற’ என்று கொள்வாரும் உண்டு. அலந்தலை - ஒருசொல்; கலக்கம் என்பது பொருள். சலம் - கோபமும்ஆம். 17 |