கைகேயியின் கலங்கா உள்ளம் 1510. | கம்ப நெடுங் களி யானை அன்ன மன்னன் வெம்பி விழுந்து எழும் விம்மல் கண்டு, வெய்துற்று, உம்பர் நடுங்கினர்; ஊழி பேர்வது ஒத்தது; அம்பு அன கண்ணவள் உள்ளம் அன்னதேயால். |
கம்ப நெடுங் களி யானை அன்ன மன்னன் - கட்டுத்தறியில் கட்டுண்ட மிக்க மதத்தையுடையகளிற்றை யொத்த அரசனாகிய தயரதன்; வெம்பி விழுந்து எழும் விம்மல் - மனம் நொந்து கீழே விழுந்து எழுகின்றதுன்ப நிலையினை; உம்பர் கண்டு - தேவர்கள் பார்த்து; வெய்துற்று நடுங்கினர் -மனம் புழுங்கி நடுங்கினார்கள்; ஊழி பேர்வது ஒத்தது - பிரளய காலம் வந்தது போன்றிருந்தது; அம்பு அன கண்ணவள் உள்ளம் - (அந்நிலையிலும்) அம்பு போன்ற கண்களையுடைய கைகேயியினது மனம்; அன்னதே - முன்பு இருந்த அதே தன்மையில் இருந்தது. தயரதன் சம்பரனைத் தொலைத்துத் தங்களுக்கு உதவியவன் ஆதலால் அவனது துன்பத்தைக் கண்டு தேவர்கள்வருந்தினர். உலகத்தவர் யாவரும் வருந்துதலால் ‘ஊழிபேர்வது ஒத்தது’ என்றார். அந்நிலையிலும்கைகேயி சிறிதும் மனம் இளகாமல் ‘உறுதியோடு இருந்தாள் என்று அவளது கொடுமை குறித்தார். கட்டுத்தறியில்கட்டப்பட்ட யானை போல என்றும் உவமை வரத்தால் பிணிப்புண்ட தயரதன் நிலையினைக் காட்டுவது,‘ஏ, ஆல் அசை. 20 |