1511. | அஞ்சலள், ஐயனது அல்லல் கண்டும்; உள்ளம் நஞ்சிலள்; ‘நாண் இலள்’ என்ன, நாணம் ஆமால்; ‘வஞ்சனை பண்டு மடந்தை வேடம்’ என்றே தஞ்சு என மாதரை உள்ளலார்கள், தக்கோர். |
ஐயனது அல்லல் கண்டும் அஞ்சலள் - (தன்) கணவனது துன்பத்தைக் கண்டும் அவள் அச்சம்கொள்ளவில்லை; உள்ளம் நஞ்சிலள்- மனம் இரங்கவில்லை; ‘நாண் இலள்’ என்ன -‘வெட்கப்படவும் இல்லை’ என்று அவள் நிலையைக் கூற; நாணம் ஆம் - (சொல்லும்) நமக்கே வெட்கம் உண்டாகும்; தக்கோர் - சால்புடைய பெரியோர்; ‘பண்டு - தொன்றுதொட்டே;வஞ்சனை - வஞ்சனை என்பது; மடந்தை வேடம் - பெண்ணுருவம்;’ என்றே -என்று எண்ணியே; மாதரை - பெண்களை; தஞ்சு என - பற்றுக்கோடு என்று; உள்ளலார்கள்- நினையார்கள். பெண்மைக் குணங்கள் யாதுமின்றி இருந்த கைகேயி நிலைபற்றிக் கூறுவது நாணம் தருகிறது என்கிறார்கம்பர். ஐயன் - கணவன், தலைவன், நஞ்சிலள் - நைந்திலள் என்பதன்போலி. தஞ்சு - தஞ்சம்என்பதன் விகாரம். ‘ஆல்’ அசை. 21 |