தயரதன் மீண்டும் வினவுதல் 1512. | இந் நிலை நின்றவள் தன்னை எய்த நோக்கி, நெய்ந் நிலை வேலவன், ‘நீ திசைத்தது உண்டோ? பொய்ந் நிலையோர்கள் புணர்த்த வஞ்சம் உண்டோ? உன் நிலை சொல்; எனது ஆணை உண்மை!’ என்றான். |
இந் நிலை நின்றவள் தன்னை - இந்நிலையில் நின்ற கைகேயியை; எய்த நோக்கி- பொருந்தப் பார்த்து; நெய்ந் நிலைவேலவன் - நெய் பூசப்பட்ட வேலையுடைய தயரதன்; ‘நீ திசைத்தது உண்டோ - நீ மனம் பிரமித்தது உண்டோ?; பொய்ந் நிலையோர்கள் புணர்த்த - வஞ்சத் தன்மையுடையவர்கள் எவரேனம் கட்டிச்சொன்ன;வஞ்சம் உண்டோ - வஞ்சனைச் சொல் உள்ளதோ?; எனது ஆணை - என் மேல் ஆணையாக; உன் நிலை உண்மை சொல் - இந்த உனது நிலையின் காரணத்தை உண்மையாகச் சொல்வாய்;’என்றான் -. தயரதனுக்குக் கைகேயியின் மாறுபட்ட நிலை வியப்பாக இருத்தலின், ‘நீ திசைத்தது உண்டோஅல்லது பொய்ம்மையாளர்கள் எவரேனும் உன் மனத்தைக் கெடுத்தனரோ?’ என்கிறான். முன்பு இராமன்மீதுஆணையிட்டுக் கூறியவன் இப்பொழுது அவளக்கு அவன்பால் அன்பின்மையை உணர்ந்து தன்மேல் ஆணை என்றான். திசைத்தல் - திகைத்தல்; பிரமித்தல். 22 |