1515.‘ஆ கொடியாய்! எனும்; ஆவி காலும்; ‘அந்தோ!
ஓ கொடிதே அறம்!’ என்னும்; ‘உண்மை ஒன்றும்
சாக!’ எனா எழும்; மெய் தளாடி வீழும் -
மாகமும் நாகமும் மண்ணும் வென்ற வாளான்.

     மாகமும் நாகமும் மண்ணும் - மேலுலகத்தையும் கீழுலகத்தையும்
நிலவுலகத்தையும்; வென்ற வாளான்-வெற்றி கொண்ட வாட்படையையுடைய
தயரதன்; ஆ கொடியாய் எனும் - (கைகேயியிபைப் பார்த்து) ஐயோ,
கொடியவளே என்பான்; ஆவி காலும் - பெருமூச்சுவிடுவான்; அந்தோ ஓ
கொடிதே அறம் என்னும் -
ஐயோ! தருமம் மிகவும் கொடியதே என்பான்;
உண்மை ஒன்றும் சாக எனா - சத்தியம் என்பதொன்று சாகட்டும் என்று
சொல்லிக்கொண்டு;எழும் - எழுந்திருப்பான்; மெய் தளாடி வீழும் -
உடம்பு  நிற்க முடியாமல் தள்ளாடிவிழுவான்.

     இப்பாட்டு ஒரு சோக சித்திரம்; மன்னவன் துயரத்தைப் படம்பிடித்துக்
காட்டுகிறது.  ஆகொடியாய் - ஆ - இரக்கக் குறிப்பு. தயரதன் அறமும்
உண்மையும் நன்மைக்குத் துணை புரியாமல் இராமன்காடு புகுதலாகிய
தீமைக்கு வழி வகுத்தலின் அவற்றை இகழ்கிறான். மாகம் - துறக்கம். நாகம்-
பாதாளம்.                                                    25