1518. | ‘ஒறுப்பினும் அந்தரம், உண்மை ஒன்றும் ஓவா மறுப்பினும் அந்தரம்’ என்று, வாய்மை மன்னன், ‘பொறுப்பினும் இந் நிலை போகிலாளை வாளால் இறுப்பினும் ஆவது இரப்பது’ என்று எழுந்தான். |
வாய்மை மன்னன் - சத்தியத்தைப் பேணிக் காக்கும் தயரதன்; ‘ஒறுப்பினும்அந்தரம் - இவளைத் தண்டித்தாலும் தீமை; உண்மை ஒன்றும் ஓவா - மெய்யைச்சிறிதும் காவாமல்; மறுப்பினும் அந்தரம் - கொடுத்த வரங்களைத் தர மறுத்தாலும்தீமை;’ என்று - என்று கருதி; ‘இந் நிலை போகிலாளை - இந்நிலையினின்றும்மாறாதவளை; பொறுப்பினும் - பொறுத்து அடங்குவதைக் காட்டிலும்; வாளால் இறுப்பினும்- வாளால் கொல்வதைக் காட்டிலும்; இரப்பது ஆவது - இவளை வேண்டி யாசிப்பதே பொருத்தம்;’ என்று எழுந்தான் - என்று கருதி, அது செய்யப் புறப்பட்டான். பலவாறாகத் துன்பப்பட்ட தயரதன் இறுதியில் இரந்து வேண்டுதல் ஒருவேளை பயன் தரலாம் என்றுகருதி அவ்வாறு செய்யத் துணிந்தான். பொறுப்பு, இறுப்பு - தொழிற்பெயர்கள்; இன் - உறழ்ச்சிப்பொருளில் வந்தது. 28 |