1522. | ‘ “கண்ணே வேண்டும்” என்னினும் ஈயக் கடவேன்; என் உள் நேர் ஆவி வேண்டினும், இன்றே உனது அன்றோ? - பெண்ணே! வண்மைக் கேகயன் மானே! - பெறுவாயேல், மண்ணே கொள் நீ; மற்றையது ஒன்றும் மற’ என்றான். |
‘பெண்ணே - ‘பெண்ணாகப் பிறந்தவளே!; வண்மைக் கேகயன் மானே -வள்ளன்மையுடைய கேகய மன்னன் மகளே!; கண்ணே வேண்டும் என்னினும் - என்கண்களையே (நீ)வேண்டும் என்றாலும்; ஈயக் கடவேன் - கொடுக்கக் கடமைப்பட்டுள்ளேன்; என் உள்நேர் ஆவி வேண்டினும் - எனது உடலின் உள்ளே நிலவும் உயிரை விரும்பினாலும்; இன்றேஉனது அன்றோ - இப்பொழுதே உன் வசமுள்ள தல்லவா?; பெறுவாயேல் - வரத்தைப் பெறவிரும்புவாயானால்; மண்ணே கொள்நீ - நாட்டை மட்டும் பெற்றுக் கொள்வாய்; மற்றையது ஒன்றும் மற - மற்றொரு வரத்தை மட்டும் மறந்துவிடு;’ என்றான் -. பெண்களுக்குரிய இரக்கம் உன்பால் இருக்க வேண்டுவதன்றோ என்னும் குறிப்போடு ‘பெண்ணே’ என்றும், உன் தந்தையின் வள்ளன்மை உனக்கும் இருத்தல் வேண்டுமன்றோ என்னும் கருத்தோடு ‘வன்மைக் கேகயன் மானே’ என்றும் கூறினான். கண்ணிற் சிறந்த உறுப்பு இல்லையாதலின் அதனையும், அக்கண்ணிற் சிறந்தது உயிராதலின் அதனையும் தருவதாகச் சொன்னான். உனது - குறிப்பு வினைமுற்று. மற்றையது- இராமனைக் காட்டிற்கு அனுப்புதல். அதனை வாயாற் சொல்லவும் அஞ்சி இவ்வாறு கூறினான். 32 |