மண்ணில் விழுந்து, மன்னன் புலம்புதல் 1529. | கொடியாள் இன்ன கூறினள்; கூற, குல வேந்தன், ‘முடி சூடாமல் வெம்பரல் மொய் கானிடை, மெய்யே நெடியான் நீங்க, நீங்கும் என் ஆவி இனி’ என்னா, இடி ஏறுண்ட மால் வரைபோல், மண்ணிடை வீழ்ந்தான். |
கொடியாள் - கொடியவளான கைகேயி; இன்னகூறினள் - இப்படிப்பட்டவற்றைச்சொன்னாள்; கூற- சொல்ல; குல வேந்தன் - சிறந்த மன்னர் மன்னனாகிய தயரதன்; இனி -இனிமேல்; நெடியான் - இராமன்;முடிசூடாமல் - மகுடம்சூட்டிக்கொள்ளாமல்; வெம்பரல் மொய் கானிடை நீங்க - கொடிய பருக்கைக் கற்கள் நிறைந்த காட்டில் உறையச்செல்ல; மெய்யே என் ஆவி நீங்கும் என்ன-உண்மையாக என் உயிர் பிரியும் என்றும் சொல்லி; இடி ஏறுண்ட மால்வரைபோல - இடியினை ஏற்ற பெரிய மலையைப்போல; மண்ணிடை- பூமியில்; வீழ்ந்தான் -சாய்ந்தான். திருமாலாதலின் இராமன் நெடியோன் என்று குறிக்கப்பெற்றான். ஏறுண்ட - தாக்கப்பட்ட; ‘இடிஏறு உண்ட’ எனப் பிரித்தும் ‘பேரிடி வீழ்ந்த’ எனப் பொருள் உரைப்பாரும் உண்டு. ‘காத்தலும்’என்ற பாடத்தினும் ‘வெம்பரல்’ என்று பாடமே சரி. 39 |