1535.என்று, என்று, உன்னும்;
     பன்னி இரக்கும்; இடர் தோயும்;
ஒன்று ஒன்று ஒவ்வா இன்னல்
     உழக்கும்; ‘உயிர் உண்டோ?
இன்று! இன்று! ’ என்னும்
     வண்ணம் மயங்கும்; இடையும் - பொன் -
குன்று ஒன்று ஒன்றோடு
     ஒன்றியது என்னக் குவி தோளான்.

     பொன்குன்று ஒன்று - பொன்மலை ஒன்று; ஒன்றோடு ஒன்றியது
என்ன -
மற்றொருபொன்மலையோடு கூடியது என்னுமாறு;  குவி
தோளான்
- திரண்ட தோள்களையுடைய தயரதன்; என்று என்று
உன்னும் -
முற்கூறியவாறு பலபடியாக நினைப்பான்;  பன்னி இரங்கும் -
வாயினால் பல சொல்லி வருந்துவான்; இடர் தோயும்- துன்ப வெள்ளத்தில்
அழுந்துவான்; ஒன்று ஒன்று ஒவ்வா - ஒன்றோடு ஒன்று பொருந்தாத;
இன்னல் உழக்கும் - பலவகைத்துன்பங்களால் வருந்துவான்; உயிர்
உண்டோ -
மூச்சு இருக்கிறதோ; இன்று இன்று என்னும்வண்ணம் -
இல்லை இல்லை என்று கூறும்படி;  மயங்கும் - மூர்ச்சையுறுவான்;
இடையும்- (நெஞ்சம்) உடைவான்.

     தோய்தல் என்னும் வினைக்கு ஏற்றவாறு இடர் வெள்ளமாக உரைக்கப்
பட்டது.  ‘பொன் குன்றுஒன்று ஒன்றோடு ஒன்றியது என்ன’ -  இல்பொருள்
உவமை.                                                     45