1537.‘அரிந்தான், முன் ஓர் மன்னவன்
     அன்றே அரு மேனி,
வரிந்து ஆர் வில்லாய்! வாய்மை வளர்ப்பான்!
     வரம் நல்கி,
பரிந்தால், என் ஆம்?’ என்றனள் -
     பாயும் கனலேபோல்,
எரிந்து ஆறாதே இன் உயிர் உண்ணும்
     எரி அன்னாள்.

     பாயும் கனலேபோல் - பரந்து எரியும் தீயைப்போல; எரிந்து
ஆறாதே
- எரிந்துதணியாமல்; இன்உயிர் உண்ணும் - இனிய உயிரை
அழிக்கின்ற;  எரி அன்னாள் -நெருப்புப் போன்ற  கைகேயி;  ‘வரிந்து
ஆர் வில்லாய் -
இறுக்கிக் கட்டப்பட்டவில்லை உடையவனே!;  முன்
ஓர் மன்னவன் -
உன் குலத்தில் முன்பு தோன்றிய ஓர் அரசன்;வாய்மை
வளர்ப்பான் -
சத்தியத்தைக் காப்பதற்காக;  அருமேனி அரிந்தான்
அன்றே-
அரிய தன் உடலை அரிந்து கொடுத்தான் அல்லவா?;  வரம்
நல்கி -
(அவ்வாறிக்க)நீ முன்னே வரத்தைத் தந்துவிட்டு; பரிந்தால் என்
ஆம் -
இப்போது  வருந்தினால் என்னபயன் உண்டாகும்;’  என்றனள்-.

     வாய்மை காக்க அருமேனி அரிந்த மன்னவன் சிபிச் சக்கரவர்த்தி
ஆவான்.  ஒரு பொருளைக்பற்றி எரித்த பின் தீயானது தணிந்துவிடுவதாய்
இருக்கக் கைகேயியாகிய தீயோ உயிரோடு கூடியமன்னவனைப் பற்றி
எரித்தும் தணியாது  அவன் உயிரையும் கொள்ளுகிறது என வேற்றுமையணி
தோன்ற, எரிந்து ஆறாதே இன் உயிர் உண்ணும் எரி  அன்னால்’
என்றார்.                                                    47