1542.தோய் கயத்தும், மரத்தும், மென் சிறை துள்ளி,
     மீது எழு புள் எலாம்
தேய்கை ஒத்த மருங்குல் மாதல் சிலம்பின்
     நின்று சிலம்புவ -
கேகயத்து அரசன் பயந்த விடத்தை,
     இன்னது ஓர் கேடு சூழ்
மா கயத்தியை, உள் கொதித்து,
     மனத்து வைவன போன்றவே.

     தோய் கயத்தும் - நீராடும் குளங்களிலிருந்தும்; மரத்தும் -
மரங்களிலிருந்தும்; மென் சிறை துள்ளி - மெல்லிய சிறகுகளால்
குதித்துக்கொண்டு; மீது எழு புள் எலாம் -வானத்தில் பறக்கின்ற
பறவைகள் எல்லாம்; தேய்கை ஒத்த மருங்குல் - தேய்வு பொருந்திய
சிற்றிடையையுடைய;  மாதல் சிலம்பின் நின்று - பெண்களின் பாதச்
சிலம்புகள்போலிருந்து;  சிலம்புவ - ஒவிப்பவை; கேகயத்து அரசன்
பயந்த விடத்தை -
கேகேய மன்னன் பெற்றெடுத்த விடம்போன்றவளை;
இன்னது ஓர்கேடு  சூழ் - இத்தகைய கெடுதியைச்சூழ்ந்து செய்த;  மா
கயத்தியை -
மிக்க கீழ்மையுடையவளை; உட்கொதித்து  - உள்ளம்
புழுங்கி; மனத்து வைவன போன்ற - மனத்திற்குள் ஏசுவனவற்றை
ஒத்திருந்தன;  ஏ -அசை.

     பறவைகள் விடியற்காலத்தில் ஒலிப்பதைக் கைகேயி செயல்கண்டு
அவளைத்
தம்மனத்தினுள் வைவது  போலும் என்றார். இது தற்குறிப்பற்ற
அணி, கணவன் உயிரை வாங்கக் காரணமாதலின்‘விடத்தை’ என்றார்.
கயத்தி - கயவன் என்பதன் பெண்பால்; கீழ்மையுடையவள். அவள்
செயலின் கொடுமை நோக்கி ‘மா கயத்தி’ என்றார். ஏ - அசை        52