குமுதங்கள் குவிதல் 1547. | சாய் அடங்க, நலம் கலந்து தயங்கு தன் குல நன்மையும் போய் அடங்க, நெடுங் கொடுங் பழிகொண்டு, அரும் புகழ் சிந்தும் அத் தீ அடங்கிய சிந்தையாள் செயல்கண்டு, சீரிய நங்கையார். வாய் அடங்கின என்ன வந்து குவிந்த - வண் குமுதங்களே. |
சாய் அடங்க - தன் பெருமை அழியவும்; நலம் கலந்து தயங்கு தன்குல நன்மையும்- நன்மை பொருந்தி விளங்குகின்ற தனது குலத்தின் சிறப்பும்; போய் அடங்க - கெட்டழியவும்; நெடுங் கொடும் பழி கொண்டு - நெடுங்காலம் நிற்பதாகிய கொடிய பழியையேற்றும்; அரும் புகழ் சிந்தும் - பெறுதற்கரிய புகழைச் சிதறுகின்ற; அத் தீ அடங்கிய சிந்தையாள்-அந்தக் கொடுமை பொருந்திய மனத்தையுடைய கைகேயியினது; செயல் கண்டு - தகாத செயலைப்பார்த்து; சீரிய நங்கைமார் வாய் - சிறந்த பெண்களின் வாய்கள்; அடங்கின என்ன- அடங்கி மூடினாற்போல; வண் குமுதங்கள் - வளப்பத்தையுடைய செவ்வாம் பல் மலர்கள்;வந்து குவிந்த - (இதழ்கள் கூடி) மூடின. ஆம்பல் மலர் காலையில் குவிதல் இயற்கை நிகழ்ச்சி. அது கைகேயியின் கொடுமை கண்டு குலப்பெண்டிர்வாயடங்கியிருந்தாற்போன்று இருந்தது என்பது தற்குறிப் பேற்றம். பழி கொண்டு புகழ் சிந்தினாள்என்பது மாற்றுநிலை அணி (பரிவர்த்தனாலங்காரம்). தீ - உலமவாகு பெயர்; தீப்போலும் கொடுமையைக்குறித்தது. 57 |