1548. | மொய் அராகம் நிரம்ப, ஆசை முருங்கு தீயின் முழங்க, மேல் வை அராவிய மாரன் வாளியும், வான் நிலா நெடு வாடையும், மெய் அராவிட, ஆவி சோர வெதும்பு மாதர்தம் மென் செவி, பை அரா நுழைகின்ற போன்றன - பண் கனிந்து எழு பாடலே. |
மொய் அராகம் நிரம்ப - அடர்ந்த காம வேட்கை மனத்தில் நிறையும்படியும்; ஆசை முருங்கு தீயின் முழங்க - ஆசை கிளர்ந்த எரியும் நெருப்பைப் போல மிகுந்திடுமாறும்; மேல் - வெளியே; வை அராவிய மாரன் வாளியும்- கூர்மை செய்யப்பட்ட மன்மதன்அம்புகளும்; வான் நிலா நெடு வாடையும்- விண்ணில் நிலவும் நீண்ட வாடைக்காற்றும்; மெய் அராவிட - உடலை அறுத்தலால்; ஆவி சோர - உயிர் தளர; வெதும்பும்மாதர்தம் மென்செவி - வாடுகின்ற மகளிருடைய மெல்லிய காதுகளில்; பண் கனிந்து எழுபாடல் - இசை முதிர்ந்து எழுகின்ற பாடல்கள்; பை அரா நுழைகின்ற போன்றன - படத்தையுடைய பாம்புகள் நுழைவனவற்றை ஒத்தன; கணவனைப் பிரிந்த மாதரை மாரன் அம்புகளும், வாடைக் காற்றும் இரவில் வருத்த. காலையில்எழுந்த பாடல்கள் அவ் வருத்தத்தை மிகுவித்துத் துன்புறுத்தின. அராகம் - காதல்; பொருளிடத்துத் தோன்றும் பற்றுள்ளம். ஆசை - உள்ளம்விரும்பியதைப் பெறவேண்டும் என்று மேலும் மேலும் நிகழ்வது. நிலா நெடுவாடை - நிலாவும் நெடியவாடைக் காற்றும். பாடல் - பள்ளியெழுச்சிப் பாடல். ஏ - ஈற்றசை. 58 |