ஆடவர் பள்ளியெழுச்சி 1549. | ‘ஆழியான் முடி சூடும் நாள், இடை ஆன பாவிஇது ஓர் இரா ஊழி ஆயினவாறு’ எனா, உயர்த போதின்மேல் உறை பேதையும், ஏழு லோகமும், எண் தவம் செய்த கண்ணும், எங்கள் மனங்களும், வாழும் நாள் இது’ எனா எழுந்தனர் - மஞ்ச தோய் புய மஞ்சரே. |
மஞ்சு தோய் புய மஞ்சர் - மேகத்தை யொத்த கைகளையுடைய ஆடவர்; ஆழியான்முடிசூடும் நாள் - சக்கரப்படை ஏந்திய இராம பிரான் மகுடம் சூடிக்கொள்ளும் நாளுக்கு; இடை ஆன - நடுவிலே வந்த; பாவி இது ஓர் இரா - பாவியாகிய இந்த ஓர் இரவு; ஊழி ஆயினவாறு எனா - ஊழிக்காலம் போல நெடிதாய் இருந்தது என்னோ என்று எண்ணியும்; உயர் போதின்மேல் உறை பேதையும் - சிறந்த தாமரைமலரில் தங்கியுள்ள திருமகளும்; ஏழுலோகமும் - ஏழு உலகத்தில் வாழ்வோரும்; எண் தவம் செய்த கண்ணும் - முடி சூட்டுவிழாவைக் காணப் பெருமைக்குரிய தவத்தைப் புரிந்த எங்கள் கண்களும்; எங்கள் மனங்களும் -அத்தகைய எங்கள் நெஞ்சங்களும்; வாழும் நாள் இது எனா - வார்ச்சியுறும் காலம் இந்நாள்என்று எண்ணியும்; எழுந்தனர் - படுக்கையிலிருந்து எழுந்தனர். இராமன் முடிசூடும் விடியலுக்குக் காத்திருந்தமையால், இரவு நீண்டு செல்வதாகத் தோன்றியது.எனவே, ‘பாவி இரா’ என்று பழித்தனர். எனினும், கைகேயி சூழ்ச்சி செய்த இரவாக அது அமைந்துஉண்மையிலேயே பாவி இரவாக ஆயிற்று. எண் தவம் செய்த என்னும் அடையினை மனங்களோடும் கூட்டுக.வாழும் நாள் - தாம் தோன்றியதற்குரிய பயனைஅடையும் நாள். இரவைப் பாவி என்றது.‘அழுக்காறு எனஒரு பாவி’ (குறள்.168) என்பது போல. 59 |